சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டு கூட்டமைபின் சார்பில் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் மார்ச் 15 முதல் 25ஆம் தேதிவரை டெல்லியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ரைஃபில்/பிஸ்டல் மற்றும் ஷார்ட் கன் என இரண்டு பிரிவுகளில் போட்டி நடைபெறுவதாக இருந்தது. இதனிடையே கடந்த இரண்டு மாதங்களாக கொரோனோ வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதிலும் உள்ள நாடுகள் வெளிநாட்டு பயணிகளுக்கு கடுமையான விதிமுறைகளை வகுத்துள்ளன.
அந்த வகையில் மத்திய அரசும் இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கான விசா வழங்கும் விதிமுறையில் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதன் காரணமாக உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் தொடரில் சீனா, இத்தாலி, தென் கொரியா, ஜப்பான், ஈரான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தத் தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், நேற்று வரையில் 22 நாடுகள் இந்தத் தொடரில் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்திருந்தன.
இந்நிலையில், தேசிய ரைஃபில் கூட்டமைப்பின் தலைவர் வெளியிட்ட அறிவிப்பில், உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள், ஒலிம்பிக் தொடருக்கு முன்பாக இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என்றும், அதற்கான தேதிகளும் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
முன்னதாக கொரோனோ பாதிப்பை கருத்தில்கொண்டு, கடந்த வாரம் சிப்ரஸ்ஸில் நடைபெற்ற ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியிலிருந்து இந்தியா விலகியது குறிப்பிடத்தக்கது.