கரோனா வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவிருந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் அடுத்த ஆண்ட்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பும்(ஐஓசி), டோக்கியோ 2020 அமைப்புக் குழுவும் இணைந்து ஒலிம்பிக் செலவினங்களை குறைப்பதற்கும், ஒத்திவைக்கப்பட்ட விளையாட்டுகளை நடத்துவதற்கான செயல்முறையை எளிதாக்குவதற்கும் 200க்கும் மேற்பட்ட வாய்ப்புகளை கொண்டு வந்துள்ளன.
இதுகுறித்து ஐஓசி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'டோக்கியோ ஒலிம்பிக் தொடர் ஒத்திவைக்கப்பட்டதன் காரணமாக ஏற்பட்டுள்ள செலவினங்களை குறைக்கும் முயற்சியாக சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பு மற்றும் டோக்கியோ 2020 குழுவும் இணைந்து 200க்கும் மேற்பட்ட வாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம்.
இந்த வாய்ப்புகள் இடங்கள், தொழில்நுட்பம், போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் பங்குதாரர் குழுக்களையும் உள்ளடக்கி செயல்படுத்தும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக காணொலி கூட்டம் மூலம் நடைபெற்ற ஐ.ஓ.சி நிர்வாகக் குழு கூட்டத்தின்போது, கரோனா பெருந்தொற்றால் ஒத்திவைக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் தொடருக்கான செலவில் சுமார் 800 மில்லியன் டாலர்களை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஏற்கும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.