சிங்கப்பூரில் முதல் முதலாக சர்வதேச அளவிலான சிலம்பப் போட்டி கடந்த ஒன்றாம் தேதி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதில் இந்தியா சார்பில் 9 மாணவர்கள் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
சவால் நிறைந்த இந்தப் போட்டியில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்வந்த் குழு போட்டியில் தங்கப்பதக்கத்தையும், பிரவீன் தங்கம் வெண்கலப்பதக்கத்தையும் கைப்பற்றினர். மேலும் தொடு திறன் பிரிவில் எஸ்வந்த் மற்றும் பிரவீன் இருவரும் வெண்கலப் பதக்கம் வென்று, இத்தொடரில் இந்தியாவிற்காக 4 பதக்கங்களை பெற்று தாய் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து இன்று சொந்த ஊருக்கு திரும்பிய மாணவர்களுக்கு ஊர் பொதுமக்கள் சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது. சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் நடைபெற்ற பாராட்டு விழா நிகழ்ச்சியில் சேலம் மாவட்டத்திற்கு மட்டுமல்லாமல் தாய் நாட்டிற்கு பெருமை சேர்த்த மாணவர்களுக்கு ஊர் பொதுமக்கள், பெற்றோர்கள் மற்றும் சிலம்பப் பயிற்சியாளர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாணவர்கள், சர்வதேச அளவில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் பங்கேற்று தாய் நாட்டிற்கு பெருமை சேர்த்தது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக பெருமிதத்துடன் தெரிவித்தனர். இதுகுறித்து பயிற்சியாளர், சிலம்பம் தமிழர்களின் பாரம்பரிய கலை மட்டுமல்லாது சிறந்த தற்காப்புக் கலையாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதனை போட்டிக்காக மட்டுமில்லாது பாரம்பரியத்தை பாதுகாக்கும் நோக்கத்தோடு மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்து வருகிறோம். தற்போதைய சூழ்நிலையில் பெண்கள் அதிக அளவில் இந்தக் கலையை கற்றுக்கொள்ள முன்வர வேண்டும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஸ்டார்க்கால் வலுவிழந்த நியூசிலாந்து; வலுவான நிலையில் ஆஸ்திரேலியா!