2019 ஆம் ஆண்டுக்கான இந்தியன் ஓபன் பேட்மிண்டன் தொடர் டெல்லியில் நடைபெற்று வருகிறது. தகுதிச் சுற்றுப் போட்டிகள் நேற்று நடந்து முடிந்த நிலையில், முதல் சுற்று ஆட்டங்கள் இன்று நடைபெற்றது.
இதில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், இந்திய நட்சத்திர வீரர் கிதாம்பி ஸ்ரீகாந்த், ஹாங்காங் நாட்டின் வோங் விங்கியுடன் மோதினார்.
பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் ஸ்ரீகாந்த் 21-16, 18-21, 21-19 என்ற செட் கணக்கில் வோங் விங் கியை போராடி வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறிய அவர் சீன வீரர் லு குவான்சூவை (Lu Guanzou) எதிர்கொள்ள உள்ளார்.
இதேபோல் நடைபெற்ற மற்றொரு முதல் சுற்றுப் போட்டியில்இந்திய வீரர் சமீர் வர்மா 21-18, 21-12 என்ற நேர் செட் கணக்கில் ரஸ்மஸ் ஜெம்கேவை வீழ்த்தி இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, நடைபெற்ற மகளிருக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி சிந்து 21-8, 21-13 என்ற நேர் செட் கணக்கில் சக நாட்டு வீராங்கனை முக்தா அக்ரேவை வீழ்த்தினார்.