ஹாங்சோவ் (சீனா): 19ஆவது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவில் உள்ள ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று 10மீ துப்பாக்கிச் சுடுதல் தனிப்பிரிவு போட்டியில் இந்திய வீராங்கனை பாலக் தங்கப் பதக்கமும், ஈஷா சிங் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளனர்.
பாலக் 242.1 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இந்திய வீராங்கனை பாலக் 2018ஆம் ஆண்டில் ஜகார்டாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தான் தனது முதல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் களமிறங்கினார். அதேபோல் வெள்ளிப் பதக்கம் வென்ற ஈஷா சிங் 239.7 புள்ளிகள் பெற்றார். இது ஈஷா சிங்குக்கு இந்த ஆசிய விளையாட்டு போட்டியில் 4ஆவது பதக்கமாகும்.
இரண்டாவது இடம் பிடித்த ஈஷா சிங்குக்கும் முதல் இடம்பிடித்த பாலக்கிற்கும் 2.6 புள்ளிகளே வித்தியாசமாகும். இன்றைய துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பாகிஸ்தான் வீராங்கனை கஷ்மலா தலத் கடும் போட்டிக்கு பிறகு மூன்றாவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.
ஈஷா சிங் 10மீ குழு துப்பாக்கிச் சுடுதலில் இரண்டு பதக்கமும், 25மீ துப்பாக்கிச் சுடுதலில் தங்கப் பதக்கமும், 25மீ ஒற்றை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றார். இதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டி 2022ஆம் ஆண்டில் தனி நபராக அதிக பதக்கங்களை வென்றவர் என்ற சாதனை படைத்துள்ளார்.
முன்னதாக 10மீ குழு துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பாலக், ஈஷா, திவ்யா தடிகோல் சுப்பராஜு இணைந்து 1731 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினர். இந்த போட்டியில் சீனா அணி 1736 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது. இந்திய அணி இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இதுவரை 8 தங்கம், 11 வெள்ளி, 11 வெண்கலத்துடன் 30 பதக்கங்கள் பெற்றுள்ளன.
இதையும் படிங்க: ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்திய வீரர்கள் பதக்க வேட்டை.. 25 பதக்கங்களுடன் 5வது இடத்திற்கு முன்னேற்றம்!