பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாவட்ட அளவிலான குடியரசு தின தடகளப் போட்டிகள் சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் இன்று தொடங்கியது. விளையாட்டுப் போட்டியினை சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி, இந்திய கூடைப்பந்தாட்ட வீராங்கனை ராஜ பிரியதர்ஷினி ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் எனப் பல்வேறு பிரிவுகளில் நடைபெறும் இப்போட்டிகளில் அரசு, தனியார் பள்ளிகளைச் சார்ந்த ஆயிரத்து 192 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொண்டுள்ளனர். இதில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் வீரர்கள் மாநில அளவிலான போட்டிக்குத் தகுதிபெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டியினை தொடங்கிவைத்த பின் பேட்டியளித்த கூடைப்பந்தாட்ட வீராங்கனை பிரியதர்ஷினி, விளையாட்டுத் துறையில் அரசியல் தலையீடு இருப்பதால் பல்வேறு வீரர்கள் பாதிக்கப்படுவதாகவும், தானும் அது போன்று பாதிப்புக்குள்ளாகியதாகவும் தெரிவித்தார். மேலும் எத்தனை தடைகள் வந்தாலும் தமிழ்நாட்டைச் சார்ந்த வீரர்கள் தகர்த்தெறிந்து இந்திய அணிக்காக விளையாட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இன்று தொடங்கிய விளையாட்டுப் போட்டிகள் இன்றும் நாளையும் என இரு தினங்கள் நடைபெறுகிறது. விளையாட்டுப் போட்டி தொடங்குவதற்கு முன் மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இதையும் படிங்க: #RolexParisMasters: தொடரிலிருந்து பின்வாங்கிய ஃபெடரர்!