உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கோவிட் 19 தொற்றால் இதுவரை எட்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், 2016 ஒலிம்பிக்கில் மகளிர் 800 மீ நீச்சல் போட்டியில் வெண்கலம் வென்ற ஹங்கேரி வீராங்கனை போக்லரா பகாஸ் கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
நீச்சல் போட்டியில் பயிற்சியை மேற்கொள்ள அவர் இரண்டுமுறை கோவிட் 19 தொற்று பரிசோதனையில் தனக்கு எவ்வித பாதிப்பு இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும். அதன் அடிப்படையில் முதல் பரிசோதனையில் அவருக்குத் தொற்று இல்லை என நிரூபணமான நிலையில், இரண்டாவது பரிசோதனையின் முடிவில் அவருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இது குறித்து அவர் கூறுகையில், "இரண்டு வாரங்களாக நான் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள எனது வீட்டிலே தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன். அதனால், என்னால் வெளியே வர முடியாது. தற்போதைய சூழலில் எனக்கு கோவிட் தொற்று இருப்பது போன்ற எந்தவித அறிகுறியும் நான் உணரவில்லை" என்றார்.
2016 ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இவர், தென் கொரியாவில் கடந்தாண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் தொடரில் மகளிர் 200 மீ பிரிவில் தங்கம் வென்றார். ஹங்கேரி நாட்டில் இதுவரை கோவிட் 19 தொற்றால் 492 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 37 பேர் மீட்கப்பட்ட நிலையில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: கோவிட் -19 வைரசால் மூச்சு விடுவதில் சிரமமாக இருந்தது’ - டிபாலா