ஆசிய அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் கடந்த ஆறாம் தேதி முதல் 8ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஷைன் யோகா பவர் மாணவர்கள் கனிஷ்கா, சஞ்சீவி, அபினேஷ், நிரஞ்சன் ஆகிய நான்கு பேர் உட்பட தமிழ்நாட்டிலிருந்து மொத்தம் 60 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
அதில், கன்னியாகுமரியில் உள்ள ஸ்ரீராம கிருஷ்ண இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவரும் கனிஷ்கா ரிதமிக் யோகா பிரிவில் தங்கம் வென்றார். அதேபோல, தூத்துக்குடி ஶ்ரீகாமாட்சி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அபினேஷ், சஞ்சீவி ஆகியோர் 14 மற்றும் 17 வயது பிரிவில் தங்கம் வென்றனர். இதுமட்டுமின்றி, முத்துவேல் செயின்ட் தாமஸ் அப்போசல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துவரும் நிரஞ்சன் பின்விளைவு பிரிவில், தங்கப் பதக்கத்தை தனதாக்கினார்.
இந்நிலையில், தங்கப் பதக்கத்துடனும் வெற்றிக்கோப்பையுடன் சென்னையிலிருந்து ரயில் மூலம் தூத்துக்குடி வந்த இவர்களுக்கு இரயில்நிலையத்தில் அவர்களது உறவினர்கள், நண்பர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இவர்களுடன் ஷைன் யோகா பவர் யோகா ஆசிரியர்கள் தனலட்சுமி, சுந்தரவேல் ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: தெற்காசிய விளையாட்டுப் போட்டி: பதக்க பட்டியலில் புதிய சாதனைப் படைத்த இந்தியா!