ஃபார்முலா ஒன் பந்தயம் பற்றி தெரிந்த அனைவருக்கும் நிச்சயமாக இந்த ஒப்பற்ற மனிதனைப் பற்றி தெரிந்திருக்கக் கூடும். ஏனெனில் ஃபார்முலா ஒன் பந்தயத்தில் இவர் மூன்று முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியதோடு, தன் வாழ்வை பந்தயத்திற்காகவே அர்ப்பணித்துள்ளார். ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த இவர் 1975, 1977(பெர்ராரி அணி), 1984 (மெக்லரென் அணி) ஆகிய மூன்று ஆண்டுகளில் ஃபார்முலா ஒன் உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்திவர்தான் நிக்கி லவ்டா.
பந்தயத்தில் மட்டுமல்லாது இவர் சிறந்த தொழிலதிபராகவும் விளங்கியுள்ளார். பந்தயத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின் விமான நிறுவன அதிபரான இவர், ஃபார்முலா ஒன் மெர்சிடிஸ் அணியின் நிர்வாகி அல்லாத தலைவராகவும் இருந்துள்ளார். 2018ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதனால், கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இவர் மே 20ஆம் தேதி மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் அறிவித்தனர். இவரது மரணம் ஃபார்முலா ஒன் ரசிகர்கள் மட்டுமல்லாது ஃபார்முலா ஒன் பந்தய வீரர்களின் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிக்கி லவ்டா - பீனிக்ஸ் பறவை!
ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில் ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்த நிக்கி லவ்டாவிற்கு, தனது இளமைப்பருவத்தில் இருந்தே ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தின் மீது அப்படி ஒரு ஈர்ப்பு. இவர் பணக்கார குடும்பத்தில் பிறந்ததால் இவர் ஈஸியாக ஃபார்முலா ஒன் பந்தய களத்திற்குள் நுழைந்து விட்டார் என்று நம் அனைவருக்கும் தோன்றும். ஆனால் நடந்தது அது இல்லை. காரணம் நிக்கி லவ்டாவின் குடும்பத்தில் யாருக்கும் அவர் ஃபார்முலா ஒன் பந்தயத்தில் பங்கேற்பதில் விருப்பம் இல்லை.
இதனால் குடும்பத்தாரின் எதிர்ப்பைச் சந்தித்த நிக்கி தனது பந்தய வாழ்க்கையை வங்கியில் கடன் பெற்று தொடங்கினார். பின்னர் 1971ஆம் ஆண்டு தனது மார்ச் அண்ட் பிஆர்எம் என்ற நிறுவனத்தின் சார்பாக முதன்முறையாக பந்தயத்தில் களமிறங்கினார்.
நிக்கி ஆரம்பம் முதலே மிகவும் திறமையான வீரராக இருந்தார். ஆனால் அவர் இருந்த அணி அவருக்கு சரியான காரை அவருக்கு அளிக்காததால், நிக்கி உலகுக்கு தெரியாமலே இருந்து வந்தார். பின்னர் தனது நண்பர் மூலம் கிடைத்த வாய்ப்பை வைத்து, நிக்கி 1974ஆம் ஆண்டு பெர்ராரி அணிக்காக பந்தயத்தில் களமிறங்கினார். அர்ஜென்டினாவில் நடைபெற்ற முதல் பந்தயத்திலேயே இரண்டாவது இடம் பிடித்து தனது அணிக்கு வியப்பை ஏற்படுத்தினார். அதைத் தொடர்ந்து அந்த சீசனில் ஆறு முறை, போல் பொஷிசன்களும் பெற்று மிகவும் வேகமான வீரராகவும் இவர் தோன்றினார்.
இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால்தான் எல்லாவற்றிற்கும் மரியாதை என்பது போல், பெர்ராரி அணியில் இடம்பிடித்த அடுத்த ஆண்டிலேயே நிக்கி தனது முதல் சாம்பியன்ஷிப் (1975) பட்டத்தைக் கைப்பற்றினார். அது மட்டுமல்லாது ஃபார்முலா ஒன் பந்தயத்தில் மற்ற அணி வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். ஆனால் இவரது வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது என்றால், அது 1976ஆம் ஆண்டு நர்பர்கிரிங்கில் நடைபெற்ற ஜெர்மன் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத்தில் ஏற்பட்ட அந்த விபத்துதான். ஆம் அந்த பந்தயத்தில் நிக்கியின் கார் விபத்தில் சிக்கி தீப்பிடித்து எரியத் தொடங்கியது. அதில் மாட்டிய நிக்கி 90 சதவிகித தீக்காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் நுரையீரல் முற்றிலும் சேதமடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அந்த சீசனில் மிகச்சிறந்த புள்ளிகளைப் பெற்று முன்னிலையில் இருந்தபோதும், அந்த கோர விபத்து இவரை பின்னுக்குத் தள்ளியதால், இவரின் பந்தய எதிரியான பிரிட்டீஸ் டிரைவர் ஜேம்ஸ் ஹண்ட் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
நிக்கி உயிர் பிழைப்பதே கடினம் என்ற நிலையில் 1977ஆம் ஆண்டில் மீண்டு(ம்) வந்த அவர் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்று அசத்தினார். இது அவரின் ரசிகர்களை உற்சாகமடைய செய்ததோடு ஃபார்முலா ஒன் பந்தயத்தில் அவர் ஒரு 'கிங்' என்பதை நிரூபித்தது. அதன்பின் பந்தயத்தில் இருந்து சற்று விலகிய அவர் தனது மற்றொரு விருப்பமான விமானத் தொழிலில் கவனம் செலுத்தத் தொடங்கினார். அதற்கு பின் நீண்ட இடைவேளைக்கு பின் மெக்லாரென் அணிக்காக களமிறங்கிய அவர், 1984ஆம் ஆண்டு மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்றார். பின் பந்தயத்தில் இருந்து ஓய்வு பெற்ற நிக்கி, விமான நிறுவன தொழிலதிபராக வலம் வந்தார். அதிலும் சிறந்து விளங்கினார். அதைத் தொடர்ந்து 90களில் பல அணிகளின் முக்கிய நிர்வாகியாக பதவி வகித்த நிக்கி ஃபார்முலா ஒன் பந்தய களத்தில் அதிக நாட்களை கழித்தார்.
ஆஸ்திரிய அரசு இவரது முகம் பதித்த அஞ்சல் தலையை வெளியிட்டு 2005ஆம் ஆண்டு கவுரவம் செய்தது. இவரது சொந்த வாழ்க்கையிலும், அந்த விபத்துக்கு பின் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. உடல்நிலையிலும் அவருக்கு அவ்வப்போது குறைபாடுகள் ஏற்பட்ட வண்ணம் இருந்ததால் சற்று அவதியடைந்தார். அது தவிர தனது மனைவியையும் 1991 ஆம் ஆண்டு விவகாரத்து செய்தார்.
பின்பு 2008ஆம் ஆண்டு தனக்கு சிறுநீரகத்தை தானமாக வழங்கிய பெண்ணை இரண்டாவது திருமணம் செய்தார். பிரிட்ஜிட் வெட்ஜிங்கர் என்ற அந்த பெண் நிக்கியின் விமான நிறுவனத்தில் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த பெண்ணின் மூலமாக இரட்டைக் குந்தைகளுக்கும் தந்தையானார் நிக்கி. பின்னர் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் மெர்சிடிஸ் அணியில் இணைந்த நிக்கி, தற்போதைய உலக சாம்பியனாக வலம் வந்து கொண்டிருக்கும் லூயிஸ் ஹாமில்டனையும் அணிக்கு கொண்டு வர முக்கிய காரணமாக திகழ்ந்தார்.
நிக்கி லவ்டா ஒப்பற்ற வீரர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. ஆனால் அவர் ஒரு ஃபீனிக்ஸ் பறவை என்பதை உலகுக்கு விளக்க நினைத்த ஹாலிவுட் இயக்குநர் ரோன் ஹாவர்டு, நிக்கியின் பந்தய வாழ்க்கையில் நடந்த சுவாரஷ்யங்களை தழுவி 'ரஷ்' என்ற படத்தை எடுத்தார். 2013ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் டேனியல் புருஹல் நிக்கியாகவும், நிக்கியின் பந்தய எதிரி ஜேம்ஸ் ஹண்ட்டின் வேடத்தில் தோர் புகழ் கிரிஸ் ஹெம்ஸ்வொர்த் நடித்திருப்பார். இப்படம் உலக அரங்கில் நல்ல வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து மெர்சிடிஸ் அணியில் கவனம் செலுத்தி வந்த நிக்கி, 2018ஆம் ஆண்டு மீண்டும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை கொண்டார். இதைத் தொடர்ந்து உடல்நலப்பிரச்னையால் அவதிப்பட்டு வந்த நிக்கி கடந்த சில தினங்களாக மருத்துவமனையில் சிசிக்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் மே 20ஆம் தேதி அவர் தூக்கத்தில் உயிரிழந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் அறிவித்தனர்.
ஃபீனிக்ஸ் பறவையான நிக்கியின் மறைவுக்கு மெர்சிடிஸ் அணி வீரர்கள், ஃபார்முலா ஒன் வீரர்கள் அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.