இந்திய அணியின் நட்சத்திர டேபிள் டென்னிஸ் வீரராக வலம்வருபவர் அச்சந்தா ஷரத் கமல். இவர் இந்தியாவின் முதல் டேபிள் டென்னிஸ் வீரர் என்ற பெருமையையும் தன்வசம்வைத்துள்ளார். மேலும் ஒன்பது முறை தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்று அசத்தியுள்ளார்.
இதற்கு முன்னதாக இந்தியாவின் கமலேஷ் மேத்தா எட்டு முறை தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றதே சாதனையாக இருந்துவந்தது. அதனை தற்போது ஷரத் கமல் முறியடித்துள்ளார்.
இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகளுக்கான தனது அணுகுமுறைப்பற்றி ஷரத் கமல் இன்று நமது ஈடிவி பாரத் செய்திக்கு வழங்கிய சிறப்புப் பேட்டியில் கூறியிருப்பதாவது:
தற்போது நடந்துமுடிந்த ஒலிம்பிக் தகுதிச்சுற்றுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய அணி, செக் குடியரசிடம் தோல்வியடைந்தது மிகவும் வருத்தமளிக்கிறது. மேலும் மக்களின் மனதை காயப்படுத்தியதற்காக என்னுடைய வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்
கடந்த போட்டியில் அடைந்த தோல்வியை சரிசெய்யும்விதமாக ஒலிம்பிக் தகுதிச் சுற்று ஒற்றையர் போட்டிக்காக மிகவும் தீவிரமான பயிற்சியை நான் மேற்கொண்டுவருகிறேன். நிச்சயமாக அதில் வெற்றியையும் பெறுவேன். அதேபோல் இந்தாண்டு நடைபெறவுள்ள கோடைகால விளையாட்டுப் போட்டிகளிலும் நான் என்னுடையை முழுத்திறனையும் வெளிப்படுத்துவேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஒலிம்பிக் ஒற்றையர் தகுதிச்சுற்றுப் போட்டி குறித்து கேட்டபோது, தகுதிச்சுற்றில் தனக்கான இடத்தைப் பிடிப்பதற்கு போதுமான நேரம் தன்னிடம் உள்ளது என்றார். அதேபோல் மற்ற வீரர்களும் கோடைகால விளையாட்டுப் போட்டியின் ஒற்றையர் பிரிவில் இடம்பெறுவர் என உறுதிபட கூறினார்.
அவரது எதிர்காலம் பற்றிய கேள்விக்கு, தான் இன்னும் அதனைப் பற்றி சிந்திக்கவில்லை எனவும், தனக்கு தற்போது இருக்கும் ஒரே சிந்தனை எதிர்வரும் ஒலிம்பிக் போட்டிகளில் கவனம் செலுத்துவது மட்டும்தான் என்றும் ஷரத் பதிலளித்தார்.
இதையும் படிங்க: 'ஒலிம்பிக் தொடரில் பங்கேற்பேன்' அர்ஜுனா விருது வென்ற சத்யன் ஷேரிங்ஸ்!