கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக இந்தியாவில் இதுவரை 23ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர். இப்பெருந்தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய மகளிர் கோ-கோ அணியின் கேப்டன் நஸ்ரின், ஊரடங்கு உத்தரவின் காரணமாக ரேஷன் பொருள்கள் வாங்குவதற்குக்கூட போராட வேண்டியுள்ளது என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து நஸ்ரின் கூறுகையில், “நான் இந்திய மகளிர் கோ-கோ அணியை தெற்காசிய விளையாட்டுப் போட்டி, ஆசிய சாம்பியன்ஷிப், லண்டன் பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் வழிநடத்தி, பதக்கங்களையும் பெற்றுத்தந்துள்ளேன். இப்படி பல சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் விளையாடிய போதிலும், இதுபோன்ற கடினமான காலங்களில் அரசாங்கத்திடமிருந்தும், சம்பந்தப்பட்ட அலுவலர்களிடமிருந்தும் எனக்கு எந்தவிதமான உதவியும் கிடைக்கவில்லை.
மேலும் என் தந்தை பாத்திரங்களை விற்பனை செய்பவர். ஊரடங்கு உத்தரவின் காரணமாக அவராலும் தற்போது வெளியே செல்ல முடியவில்லை. மேலும் அவர் ஒருவர் மட்டுமே குடும்பத்தில் வேலைக்கு செல்பவர், இதனால் குடும்பத்தில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் ரேஷன் பொருள்கள் வாங்குவதற்கு கூட நாங்கள் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. பிறகு இந்திய கோ-கோ கூட்டமைப்பின் தலைவர் தியாகி எங்களுக்குத் தேவையான உதவிகளை செய்தார். ஆனாலும் எங்கள் பிரச்னைகள் தீரவில்லை.
நான் தேசிய அணியை வழிநடத்தியுள்ளதால், டெல்லி அரசாங்கம் எனக்கு உதவி செய்யும் என்ற நம்பிக்கையில் இருந்தேன், ஆனால் அவர்களும் எனது ட்விட்டர் பதிவுக்கு பதிலளிக்கவில்லை. இதனால் தற்போது டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் எனது பிரச்னைகள் குறித்தும், எனது குடும்ப சூழ்நிலை குறித்தும் முறையிட்டுள்ளேன். ஆனால் அவரும் தற்போது வரை இந்த விஷயத்தை கவனிக்காமல் இருப்பது எனக்கு மிகவும் வேதனையளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
இந்திய மகளிர் கோ-கோ அணியின் கேப்டனாக செயல்பட்டுவரும் நஸ்ரின், தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகள், லண்டன் பல்கலைகழக விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தி தங்கப்பதக்கம் பெற்றுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தலைவன் ஒருவனே: சச்சின்... சச்சின்...!