12ஆவது ஆசிய ஏர்கன் துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் தொடர் சீனதைபேயின், டாவோயுவானில் நடைபெற்றுவருகிறது. இதில், ஆடவர் தனிநபர் 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிச் சுற்றில் இந்திய வீரர் திவ்யான்ஷ் 249.7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
இதேபோல், ஆடவர் அணிகளுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் திவ்யான்ஷ், ரவி குமார், தீபக் குமார் ஆகியோர் அடங்கிய இந்திய அணி, 1880.7 புள்ளிகளை பெற்று முதலிடம் பிடித்தனர். இதனால், இவர்கள் தங்கப் பதக்கத்தை வென்றனர். அவர்களைத் தொடர்ந்து, 1862.3 புள்ளிகளைப் பெற்ற தென் கொரியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து, மகளிர் தனிநபர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய வீராங்கனை இளவேனில் 250.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இதையடுத்து, மகளிர் அணிகளுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில், இளவேனில், அபுர்வி சண்டேலா, மேகனா ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1878.6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து, தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றனர். அவர்களைத் தொடர்ந்து, 1872.5 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்த சீனதைபே அணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
இதன் மூலம், 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் மட்டும் இந்திய நட்சத்திரங்கள் நான்கு தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர். அதைத்தவிர, இந்த தொடரில், இதுவரை இந்தியாவுக்கு 12 தங்கம், நான்குவெள்ளி, இரண்டு வெண்கலம் என மொத்தம் 18 பதக்கங்களை வென்றுள்ளனர்.