ஆசிய வலு தூக்கும் போட்டி ஹாங்காங் நாட்டில் நடைபெற்றது. இதில், சென்னை சேர்ந்த பல் மருத்துவரான ஆர்த்தி தங்கம் வென்றார். இந்நிலையில், ஏஎன்ஐ ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது,
"இந்திய நாட்டுக்காக இந்தப் போட்டியில் நான் பங்கேற்றேன். இதில் பங்கேற்பதற்காக நான் சம்பாதித்த ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்தேன். வலு தூக்கும் போட்டியில் நான் தங்கம் வென்றப் பின், அரசாங்கம் இதுவரை எனக்கு எந்த ஒரு பாராட்டும், நிதி உதவியும் வழங்கவில்லை. என்னை போன்று தங்கம் வென்ற ஏராளமான வலு தூக்கும் வீரர்கள் அங்கீகரிக்கப்படாமலே உள்ளனர்". என தனது மனவேதனையை கொட்டினார். மேலும், வலு தூக்கும் போட்டியில் கலந்து கொள்ள நானே எவ்வளவுதான் இனியும் செலவு செய்ய முடியும்? எனவும் கேள்வி எழுப்பினார்.
முன்னதாக, டெல்லியை சேர்ந்த மல்யுத்த வீராங்கனை திவ்யா கக்ரனும் இதேபோன்று டெல்லி அரசை கடுமையாக சாடினார். 2018 ஆசியப் போட்டியில் மல்யுத்தப் பிரிவில் அவர் வெண்கலம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.