தேசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடைபெற்றுவருகிறது. இதில், இன்று மகளிருக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தய இறுதிச்சுற்று நடைபெற்றது.
இப்போட்டியில், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தேசிய சாதனைப் படைத்த டூட்டி சந்தை பின்னுக்குத் தள்ளி தமிழ்நாட்டைச் சேர்ந்த தனலக்ஷ்மி 100 மீட்டர் இலக்கை 11.39 விநாடிகளில் கடந்து தங்கப்பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.
இப்போட்டியில் டூட்டி சந்த், இலக்கை 11.58 விநாடிகளில் கடந்து இரண்டாம் இடத்தைப் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை வென்றார். அதேபோல் மற்றொரு தமிழ்நாடு வீராங்கனை அர்ச்சனா சுசிந்திரன் 11.76 விநாடிகளில் இலக்கை எட்டி வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
மேலும், இந்தியாவின் நட்சத்திர தடகள வீராங்கனை ஹீமா தாஸ், நடப்பு தேசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரின் 100, 200, 400 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் தவறான தொடக்கத்தைத் (false start) தந்ததால், போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
அதேசமயம் ஆடவர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த குரிந்தர்வீர் சிங் இலக்கை 10.32 விநாடிகளில் கடந்து தங்கப்பதக்கம் வென்றார். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இலக்கியதாசன் (10.43) வெள்ளிப்பதக்கத்தையும், மகாராஷ்டிராவைச் சேர்ந்த சதீஷ் கிருஷ்ணகுமார் (10.56) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
இதையும் படிங்க: டி20 கிரிக்கெட்: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு!