சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இது, சென்னை அணியின் கேப்டனாக தோனி விளையாடும் 200வது போட்டியாகும். ஐபிஎல் வரலாற்றில் 200 ஆட்டங்களுக்கு கேப்டனாக செயல்பட்ட ஒரே வீரர் என்ற பெருமைக்குரியவர் தோனி.
இந்த நிலையில் ஆட்டம் தொடங்கும் முன், மகேந்திர சிங் தோனி கவுரவிக்கப்பட்டார். அவருக்கு இந்தியா சிமெண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீனிவாசன், அவரது மனைவி சித்ரா ஸ்ரீனிவாசன் மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷனின் தலைவர் ரூபா குருநாத் ஆகியோர் நினைவுப்பரிசு வழங்கினர்.
கடந்த 2008ஆம் ஆண்டு முதல் சென்னை அணிக்கு கேப்டனாக தோனி விளையாடி வருகிறார். தோனி தலைமையில் கடந்த 199 ஆட்டங்களில், 120 போட்டிகளில் சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது. 78 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்துள்ள நிலையில், ஒரு போட்டிக்கு மட்டும் முடிவு எட்டப்படவில்லை. 2016 - 2017 ஆகிய ஆண்டுகளில் சென்னை அணி இடைநீக்கம் செய்யப்பட்டதால், புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு தோனி கேப்டனாக செயல்பட்டார்.
தோனியைத் தொடர்ந்து, ரோகித் சர்மா தலைமையில் மும்பை அணி 146 முறை களம் இறங்கியுள்ளது. 3வது இடத்தில் இருக்கும் விராட் கோலி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக 140 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: சிஎஸ்கே கேப்டனாக 200வது போட்டியில் களமிறங்கும் தோனி.. ஜடேஜாவின் ஸ்பெஷல் கிப்ட் என்ன?