செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் என்ற ஆன்லைன் ரேபிட் செஸ் தொடர் நடைபெற்ற வருகிறது. இத்தொடரின், 5ஆவது சுற்றில் உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கார்ல்சனை சென்னையை சேர்ந்த 16 வயது வீரர் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றுள்ளார். டிராவை நோக்கி சென்றுகொண்டிருந்த இப்போட்டியில், பிராக்ஞானந்தாவின் 40ஆவது நகர்வு ஆட்டத்தில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
அதற்கடுத்த நகர்வில், ஆட்டத்தை கைவிடுவதாக கார்ல்சன் அறிவித்தார். அதாவது, கார்ல்சன் தனது முந்தைய நகர்வில், தன்னுடைய குதிரையை (கருப்பு) தவறுதலாக நகர்த்தினார். இதை கவனித்த பிரக்ஞானந்தா ஒரே நகர்வில் அவருக்கு செக் வைத்து ஆட்டத்தை முடித்துள்ளார்.
'பரீட்சையின் நடுவே ஆட்டம்: வெற்றிக்கு பின் பிரக்ஞானந்தா,"தற்போது, இந்த தொடரின்போது நான் பள்ளித் தேர்வையும் எழுதிவருகிறேன். எனது ஆட்டத் தரம் குறித்து பெரிதும் எனக்கு வியப்பு ஏதும் இல்லை. சில நுணக்கங்களை, வியூகங்களை, தந்திரங்களை தவறவிடுகிறேன். அதனால், என்னை நான் கூர்மைப்படுத்திக்கொள்ள வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
தற்போதைய இந்த செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் தொடரில் 16 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இத்தொடரின் 2ஆம் நாள் முடிவில், பிரக்ஞானந்தா 5ஆவது இடத்திலும், கார்ல்சன் 3ஆவது இடத்திலும் உள்ளனர். மேலும், இந்திய வீரர்கள் பி. ஹரிகிருஷ்ணா 7ஆவது இடத்திலும், விடித் குஜராத்தி 13ஆவது இடத்திலும் உள்ளனர். சீன வீரர் வேய் யி முதல் இடத்தில் உள்ளார்.
3ஆவது இந்தியர்: முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ஆன்லைன் தொடரிலும் ஐந்து முறை உலக சாம்பியனும், தற்போதைய நம்பர் 1 வீரருமான கார்சலனை பிரக்ஞானந்தா வீழ்த்தியிருந்தார். விஷ்வநாதன் ஆனந்த், பி. ஹரிகிருஷ்ணா ஆகியோரை தொடர்ந்து கார்ல்சனை வீழ்த்தும் மூன்றாவது இந்தியர் பிரக்ஞானந்தா.
சதுரங்க சாம்பியன் போட்டியானது 9 தொடர்களாக பிப்ரவரி மாதத்தில் தொடங்கி நவம்பர் வரை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, மூன்று தொடர்கள் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது செஸ்ஸபிள் தொடர் நான்காவது தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.