கரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் இதுவரை, ஆறரை லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் இப்பெருந்தோற்றின் அச்சுறுத்தலினால் ஐபிஎல் உள்ளிட்ட அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கடந்த மாதம் ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட தளர்வுகளின் காரணமாக, விளையாட்டு வீரர்கள் தங்களது பயிற்சிகளை மேற்கொள்ளலாம் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து பாட்டியாலாவிலுள்ள தேசிய விளையாட்டு நிறுவனத்தில், குத்துச்சண்டை வீரர்களுக்கான முதல்கட்ட பயிற்சிகள் வருகிற ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என, அதன் உயர் செயல்திறன் இயக்குநர் சாண்டியாகோ நீவா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துப் பேசிய அவர், ”ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்பு நாங்கள் அனைத்துக் குத்துச்சண்டை வீரர்களையும் வீட்டிற்கு அனுப்பினோம். தற்போது அவர்கள் மீண்டும் பயிற்சி முகாமிற்குத் திரும்பவுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அதன்படி முதல்கட்டமாக 13 ஆண்கள், மூன்று பெண்கள் அடங்கிய குழு என்ஐஎஸில் பயிற்சி பெறவுள்ளது. இதைத் தொடர்ந்து மீதமுள்ள வீரர்களும் அடுத்தடுத்து தங்களது பயிற்சிக்குத் திரும்புவர்.
அதேசமயம், அதிகமான விரர்கள் இங்கு வர குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் ஆகும். அதனால் ஆகஸ்டு ஒன்றாம் தேதிக்குள், பயிற்சி முகாமைத் தொடங்க திட்டமிட்டுள்ளோம். முன்கூட்டியே வாய்ப்பிருந்தால் ஜூலை15ஆம் தேதியே முகாம் தொடங்குவது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டுவருகிறோம்” என்றார்.