கரோனா வைரஸ் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், நான்காம் கட்ட ஊரடங்கு பல தளர்வுகளுடன் அமலில் உள்ளது. அதன் ஒருபகுதியாக விளையாட்டு வீரர்கள் பயிற்சிக்குத் திரும்பலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் கரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில், விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறுவதற்கு விளையாட்டு ஆணையம் அவசரம் காட்டக் கூடாது என இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் ராஹீவ் மேத்தா தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ”ஒவ்வொரு நாளும் இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகமாகி வரும் நிலையில், வீரர்களைப் பயிற்சியில் ஈடுபடுத்த அவசரம் காட்டப்படுவது ஏன்?
விளையாட்டு வீரர்கள் எப்போதும் இந்தியாவின் பெருமையாகப் பார்க்கப்பட்டு வருகிறார்கள். அவர்களின் பாதுகாப்பே முதலில் முக்கியம். இப்போது பயிற்சி செய்து வரும் வீரர்களில் பலரும் ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதிபெற்றுள்ளனர்.
மாநில விளையாட்டு சங்கங்களும், அரசும் விளையாட்டு வீரர்களைப் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும் என நிர்பந்திக்கக் கூடாது. வீரர்கள் பயிற்சி செய்ய வேண்டும் என நினைப்பது அவர்களின் மனநிலையைப் பொறுத்தது.
வீரர்களின் பயிற்சியைத் தொடங்குவதில் ஏன் அவசரம் காட்டப்படுகிறது என்பதுதான் எனக்கு இன்னும் புரியவில்லை'' என்றார்.
இதையும் படிங்க: ஆகஸ்ட்டில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா டி20 தொடர்!