எஃப்எம்எஸ்சிஐ தேசிய ரேலி கார் பந்தய சாம்பியன்ஷிப் போட்டியின் மூன்றாவது சுற்று ராஜஸ்தான் மாநிலம் பர்மர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய நட்சத்திர கார் பந்தய வீரர் கௌரவ் கில்லும் கலந்துகொண்டார். முதல் ஸ்டேஜின்போது கில் முதல் இடத்தில் இருந்தார். அப்போது அவர் மணிக்கு 150 கி.மீ வேகத்தில் காரை இயக்கிக் கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் ஒரு கடினமான திருப்பத்தில் கில், தனது பந்தய காரை திருப்பியுள்ளார். அச்சமயத்தில் திடீரென சாலையின் நடுவே மூன்று நபர்களுடன் இருசக்கர வானம் ஒன்று நின்றுள்ளது. இதைக் கண்ட கில் காரை அவர்கள் மீது மோதாமல் இருக்கும்படி திருப்ப முயற்சித்துள்ளார். எனினும் கட்டுப்பாட்டை இழந்த கார் இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், மகன் உள்ளிட்ட மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கார் ஓட்டுநர் கௌரவ் கில்லின் விலா எலும்பில் காயம் ஏற்பட்டது. மேலும் அவர் சுவாசப் பிரச்னையில் தொடர்ந்து அவதிப்பட்டுவருகிறார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு கூடிய கிராம மக்கள் உயிரிழந்த நபர்களின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டதால் பந்தயம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து அப்பகுதியில் நூற்றுக்கணக்கான காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். மேலும், விபத்து தொடர்பாக கௌரவ் கில், அவரது வழிகாட்டுதல் ஓட்டுநர் முசா செரிஃப் ஆகிய இருவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் 304 கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய தேசிய ரேலி கார் சாம்பியன்ஷிப் தலைவர் கூறுகையில், ’’பந்தயம் நடத்தும் சாலைகளில் யாரும் வரவேண்டாம், நாங்கள் கடந்த 15 நாள்களாக தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தோம். ஆனால் அதை பொருட்படுத்தாமல் கிராம மக்கள் தொடர்ந்து மீறிவந்தனர். இந்த விபத்து நடைபெற்ற பகுதியிலும் தடைகளை தாண்டி அத்துமீறி கிராமத்தினர் நுழைந்ததே விபத்துக்கு காரணம்” என்றார்.
நட்சத்திர கார்பந்தய வீரரான கௌரவ் கில், ஆசிய பசிபிக் ரேலி சாம்பியன்ஷிப் பட்டத்தை மூன்று முறை கைப்பற்றினார். மேலும் அர்ஜூனா விருது பெற்ற ஒரே கார் பந்தய வீரர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.