சர்வதேச ராணுவ விளையாட்டு கவுன்சில் சார்பில் ராணுவ வீரர்களுக்கான மிலிட்டரி விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த ராணுவ விளையாட்டுப் போட்டிகளின் ஏழாவது தொடர் சீனாவின் வுகான் நகரில் நடைபெற்றுவருகிறது. மொத்தம் 27 விளையாட்டுப் போட்டிகளில் 140க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பத்தாயிரத்திற்கும் அதிகமான ராணுவ வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் இந்தியா சார்பிலும் முப்படைகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றுள்ளார்கள்.
இதில் மாற்றுத் திறனாளி வீரர்களுக்காக நடத்தப்பட்ட பாரா தடகளப் போட்டியின் 200 மீ ஓட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்நாட்டு வீரர் ஆனந்தன் குணசேகரன் பந்தய தூரத்தை 24.31 விநாடிகளில் கடந்து தங்கப்பதக்கம் வென்றார். அவருக்கு அடுத்தபடியாக கொலம்பிய வீரர் ஃபஜார்டோ பார்டோ டியோடிசிலோ (26.11 விநாடிகள்) வெள்ளியும், பெரு வீரர் காஸா ஜோஸ் (27.33 விநாடிகள்) வெண்கலமும் வென்றனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆனந்தன் குணசேகரன் நடப்பு ராணுவ விளையாட்டுப் போட்டிகளில் வெல்லும் மூன்றாவது தங்கம் இதுவாகும். முன்னதாக இவர் 100 மீ, 400 மீ ஓட்டங்களில் தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் ஷிவ்பால் 83.33 மீ தூரத்திற்கு ஈட்டி எறிந்து தங்கம் வென்றார். 25 மீ செண்டர் பைல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் குர்பிரீத் சிங் வெண்கலம் வென்றார். உலக ராணுவ விளையாட்டுப் போட்டியில் இந்தியா இதுவரை 6 தங்கம், 1 வெண்கலம் என ஏழு பதக்கங்களை வென்றுள்ளது.