டெல்லி: நடந்த முடிந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடரின் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று இந்தியாவிற்கு தடகளப் பிரிவில் முதல்முறையாக பதக்கம் வென்றுகொடுத்தார்.
இந்நிலையில், நீரஜ் சோப்ராவுக்கு பெருமை சேர்க்கும் வகையில், அவர் தங்கப் பதக்கம் வென்ற நாளான ஆகஸ்ட் 7ஆம் தேதி தேசிய ஈட்டி எறிதல் தினமாக கொண்டாடப்படும் என இந்திய தடகள கூட்டமைப்பு (AFI) அறிவித்துள்ளது.
மாவட்ட அளவில் போட்டிகள்
இது குறித்து இந்திய தடகள கூட்டமைப்பின் திட்டக்குழு தலைவர் லலித் பனோட் கூறுகையில்,"இந்தியா முழுவதும் ஈட்டி எறிதலை ஊக்குவிக்கப்பதற்காக, ஆகஸ்ட் 7ஆம் தேதியை தேசிய ஈட்டி எறிதல் தினமாக கொண்டாட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், எங்கள் அமைப்போடு இணைக்கப்பட்ட துணை அமைப்புகள் தங்கள் மாநிலங்களில் அன்றைய தினத்தில் ஈட்டி எறிதல் போட்டிகளை ஏற்பாடு செய்யும். இதில் மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு, போட்டிகளுக்கு தேவைப்படும் ஈட்டிகளும் விநியோகிக்கப்படும். வரும் காலங்களில் இப்போட்டிகளை தேசிய அளவில் நடத்த திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
நீரஜ் மகிழ்ச்சி
இதுகுறித்து நீரஜ் சோப்ரா தெரிவிக்கையில்,"என்னுடைய சாதனையை தேசிய அளவில் நினைவுக்கூறும் வகையில் இந்திய தடகள கூட்டமைப்பு அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. என்னுடைய சாதனை இளைஞர்களை தடகளத்தை நோக்கி, குறிப்பாக ஈட்டி எறிதலை நோக்கி வரவழைக்கும் என்றால் அது எனக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கும்.
ஈட்டி எறிதலை நோக்கி வரும் சிறுவர்களுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்கும்பட்சத்தில் அவர்கள் இந்த விளையாட்டை வாழக்கையாக எடுத்துக்கொள்வார்கள். வருங்காலத்தில் பதக்கத்தை வெல்லக்கூடியவர்களாகவும் அவர்கள் உருவெடுக்கலாம்" என்றார்.
டோக்கியோ ஒலிம்பிக்
2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் 200 மேற்பட்ட நாடுகளில் இருந்து 11 ஆயிரத்திற்கும் அதிகமான வீரர்கள் கலந்துகொண்டனர். இந்த ஒலிம்பிக் தொடரில்தான் இந்தியா தனது அதிகபட்ச பதக்கங்களை (தங்கம், 2 1 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்கள்) பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்தியா 2, சீனா 274 - ஒலிம்பிக் உணர்த்தும் பாடம் என்ன?