டெல்லி : டோக்கியோ ஒலிம்பிக்கின் தடகளப் போட்டிகளில் இந்திய அணி சார்பில் 26 பேர் பங்கேற்கின்றனர்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் தடகளப் போட்டிகள் ஜூலை 31 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8 ஆம் தேதி நிறைவு பெறுகின்றன. இந்தப் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்கும் வீரர் மற்றும் வீராங்கனைகள் விவரம் வருமாறு:-
வீரர்கள்
அவினாஷ் சேபிள், எம்.பி. ஜபீர் (400 மீ தடை ஓட்டம்), எம். ஸ்ரீஷங்கர் (நீளம் தாண்டுதல்), தாஜிந்தர்பால் சிங் டூர் (குண்டு எறிதல்), நீரஜ் சோப்ரா மற்றும் சிவ்பால் சிங் (ஈட்டி எறிதல்), கே.டி. இர்பான், சந்தீப் குமார் மற்றும் ராகுல் ரோஹில்லா (20 கி.மீ. நடை பந்தயம்) மற்றும் குர்பிரீத் சிங் (50 கி.மீ. நடை பந்தயம்), அமோஜ் ஜேக்கப், ஆரோக்கிய ராஜீவ், முகமது அனஸ், நாகநாதன் பாண்டி (4*400 தொடர் ஓட்டம்), நோவா நிர்மல் டாம், சர்தக் பாம்ப்ரி, அலெக்ஸ் ஆண்டனி (கலப்பு தொடர் ஓட்டம்).
இவர்களில் ஆரோக்கிய ராஜீவ் மற்றும் நாகநாதன் பாண்டி ஆகியோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
வீராங்கனைகள்
டூட்டி சந்த் (100 மீ மற்றும் 200 மீ ஓட்டம்); கமல்பிரீத் கவுர் மற்றும் சீமா ஆன்டில்-புனியா (வட்டு எறிதல்) மற்றும் அன்னு ராணி, பாவ்னா ஜாட் மற்றும் பிரியங்கா கோஸ்வாமி (20 கி.மீ. நடை) மற்றும் ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன், தனலட்சுமி சேகர். இந்த மூவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். ரேவதி மதுரையையும், தனலட்சுமி சேகர், சுபா வெங்கடேசன் திருச்சியையும் சேர்ந்தவர்கள். இவர்கள் கலப்பு தொடர் ஓட்டத்தில் பங்கேற்கின்றனர்.
இது குறித்து இந்திய தடகள சம்மேளனத்தின் தலைவர் அடில் ஜே சுமாரிவாலா (Adille J. Sumariwalla) விடுத்துள்ள அறிக்கையில், “இது ஒரு சிறந்த அணி. வீரர்-வீராங்கனைகள் மனதளவிலும், உடலளவிலும் நல்ல முறையில் உள்ளனர். இது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இவர்கள் சிறந்த தடகள வீரர்களுக்கு சவாலாக விளங்குவார்கள். பொது முடக்கம் நீக்கப்பட்ட பின்னர் நமது வீரர்கள் சிறந்த பயிற்சியை பெற்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ரசிகர்களுக்கு அனுமதி!