ஆண்டுதோறும் விளையாட்டுத்துறையில் சாதிக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ராஜீவ் காந்தி கேல்ரத்னா, அர்ஜூனா விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்தாண்டிற்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கும், அர்ஜுனா விருதுக்கும் தடகள வீரர்கள் யார் யார் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை இந்திய தடகள சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய தடகள சம்மேளனம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், விளையாட்டுத் துறையில் மிக உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருதுக்கு ஈட்டி எறிதல் வீரர் நிராஜ் சோப்ராவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஓட்டப்பந்தய வீராங்கனை டூட்டி சந்த், மன்ஜித் சிங், பி.யு சித்ரா, ஆசிய போட்டிகளில் தங்கம் வென்ற (ட்ரிபிள் ஜம்ப் பிரிவு) அர்பிந்தர் சிங், ஆகிய நான்கு பேரும் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளது.
இதன்மூலம், நீராஜ் சோப்ரா தொடர்ந்து மூன்றாவது முறையாக கேல்ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். ஆனால் குத்துச்சண்டை வீராங்கனை மிராபாய் சானுவால் 2018 ஆம் ஆண்டிலும், மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியாவால் கடந்த ஆண்டிலும் நிராஜ் சோப்ராவுக்கு கேல்ரத்னா விருது கிடைக்காமல் போனது.
இரண்டுமுறை இந்த விருதை தவறவிட்ட அவர் இம்முறை வெல்வார் என இந்திய தடகள சம்மேளனத்தின் தலைவர் அடில் சுமரிவாலா தெரிவித்துள்ளார். 2018 ஆசிய போட்டிகள், காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்ற நிராஜ் சோப்ரா அதே ஆண்டில் அர்ஜூனா விருது வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.