கரோனா வைரஸ் காரணமாக அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்திய தடகள வீரர்கள் ஒரு சிலர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்துகளை பயன்படுத்துவதாக தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் குற்றஞ்சாட்டியது.
இது குறித்து பேசிய இந்திய தடகள கூட்டமைப்பின் தலைவர் அடில் சுமரிவல்லா, “கரோனா ஊரடங்கு காலத்தில் விளையாட்டு வீரர்கள் தங்களது பயிற்சிகளை மேற்கொள்ள முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ஆனால் அதேசமயம் இந்த ஊரடங்கைப் பயன்படுத்தி தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளை சிலர் எடுத்துக்கொள்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும் ஊக்கமருந்து எடுத்துகொண்டு சில மாதங்கள் ஆன பிறகு அவற்றைக் கண்டுபிடிக்க இயலாது என வீரர்கள் எண்ணுகின்றனர்.
இதனால் வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் சொல்வது ஒன்று தான். தடை செய்யப்பட்ட ஊக்கமருந்துகளின் வீரியமானது நீண்ட நாள்களுக்கு நம் உடலிலேயே இருக்கும். அதனால் அதனை யாரும் உபயோகப்படுத்த வேண்டாம்.
அப்படி வீரர்கள் ஊக்கமருந்து எடுத்துக்கொண்டது தெரியவந்தால், அவர்கள் உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்படுவதோடு, சிபிஐ விசாரணைக்கும் உள்படுத்தப்படுவர்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக கடந்த ஆண்டு ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய ரஷ்யாவிற்கு நான்கு ஆண்டுகள் எந்தவித விளையாட்டு போட்டிகளிலும் பங்கேற்கக் கூடாது எனச் சர்வதேச ஊக்கமருந்து தடுப்புப் பிரிவு தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:வியன்னா ஓபன்: இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் ரூபெலேவ்!