2022ஆம் ஆண்டு இங்கிலாந்தின் பெர்மிங்ஹாம் நகரில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் வேகமாக நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில் இந்திய விளையாட்டு அமைச்சகம் காமன்வெல்த் விளையாட்டின் போட்டிகளின் வில்வித்தை, துப்பாக்கி சுடுதல் ஆட்டங்களை இந்தியாவில் நடத்த வேண்டுமென காமன்வெல்த் கூட்டமைப்பிடம் அனுமதி கேட்டிருந்தது.
அதன்படி, 2022ஆம் ஆண்டு நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் வில்வித்தை, துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளை இந்தியா சண்டிகர் நகரில் நடைபெறும் எனவும், மேலும் இந்தப் போட்டிகள் முன்கூட்டியே 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்கும் எனவும், பர்மிங்ஹாமில் மீதமுள்ள அனைத்து போட்டிகளும் 2022ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது.
இது குறித்து காமன்வெல்த் விளையாட்டுக் கூட்டமைப்பின் தலைவர் டேம் லூசி மார்டின் கூறுகையில், இந்தியாவின் வேண்டுதலை ஏற்று, 2022ஆம் ஆண்டிற்கான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் வில்வித்தை, துப்பாக்கிச் சுடுதல் ஆட்டங்களை சண்டிகரில் நடத்துவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளோம்.
இதன்மூலம் வில்வித்தை, துப்பாக்கிச் சுடுதல் வீரர், வீரங்கனைகள் பழக்கப்பட்ட இடத்தில் தங்களது போட்டிகளில் விளையாடவுள்ளனர். மேலும் இதனை சாத்தியப்படுத்திய இந்திய காமன்வெல்த் விளையாட்டுக் கூட்டமைபின் தலைவர் நரிந்தர் துருவ், மத்திய விளையாட்டு அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோருக்கு எனது பாராட்டுகளைத் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 2026ஆம் ஆண்டிற்கான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ள இடம் குறித்து இந்தாண்டு ஜூலை மாதம் நடைபெறவுள்ள காமன்வெல்த் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க:24 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இடம் பிடித்த கிரிக்கெட்...!