கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாகவும், ஊரடங்கு காரணமாகவும் விளையாட்டு வீரர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர். பின் கடந்த ஆகஸ்ட் மாதம் வீரர்கள் பயிற்சிக்கு திரும்ப உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, இந்திய ஹாக்கி அணி வீரர்கள் பெங்களூருவில் உள்ள தேசிய விளையாட்டு பயிற்சி முகாமில் தங்களது பயிற்சிகளை மேற்கொண்டு வந்தனர்.
இதையடுத்து அவர்களுக்கு மூன்று வாரம் ஓய்வளிக்கப்பட்டது. பின்னர் தற்போது ஜனவரி 5ஆம் தேதி முதல் 33 பேர் அடங்கிய இந்திய ஆடவர் ஹாக்கி அணியினர் பெங்களூருவிலுள்ள தேசிய விளையாட்டு பயிற்சி மையத்தில் தங்களது பயிற்சியைத் தொடரவுள்ளனர்.
இதுகுறித்து இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் தலைமைப் பயிற்சியாளர் கிரஹாம் ரீட் கூறுகையில், “இந்த மூன்று வார இடைவெளிக்குப் பிறகு வீரர்கள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் புத்துணர்வு பெற்றிருப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன். எங்கள் முந்தைய முகாமில், யோ-யோ டெஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை பெற்றிருந்தோம்.
அதனால் இந்த முகாமின்போது வரவிருக்கும் போட்டிக்கு எவ்வாறு தயாராவது உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளோம். ஏனெனில் நாங்கள் ஒலிம்பிக் தொடருக்கு முன்னதாக சில சர்வதேச போட்டிகளில் விளையாடவுள்ளோம். அதனால் இந்த பயிற்சி எங்களுக்கு உதவியாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:'அணியை வழிநடத்த பிறந்தவர் ரஹானே' - இயான் சேப்பல்