டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி அரையிறுதியில் அர்ஜெண்டினா அணியுடன் மோதியது.
தங்கமோ, வெள்ளியோ இந்தியாவுக்கு உறுதி என்ற எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு 1-2 என்று அர்ஜெண்டினாவிடம் தோல்வியடைந்து ஏமாற்றமளித்தனர்.
இதனையடுத்து வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவும் தி கிரேட் பிரிட்டனும் இன்று மோதிக்கொண்டன.
ஆட்டம் தொடங்கியது முதலே இரண்டு அணி வீராங்கனைகளும் கோல் அடிக்க பல முயற்சிகள் எடுத்தனர். ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை. இதனால் ஆட்டத்தின் முதல் கால் பாதி கோல்கள் ஏதுமின்றி முடிந்தது.
கிரேட் பிரிட்டன் முன்னிலை
தொடர்ந்து நடந்த ஆட்டத்தின் 16ஆவது நிமிடத்தில் கிரேட் பிரிட்டன் வீரர் ராயர் எலினா கோல் அடித்து கிரேட் பிரிட்டனுக்கான கோல் கணக்கை தொடங்கிவைத்தார்.
அவரைத் தொடர்ந்து கிரேன் பிரிட்டனின் ராபர்ட்சன் சாரா ஆட்டத்தின் 24ஆவது நிமிடத்தில் மற்றொரு கோல் அடித்து அணியை 2-0 என்று முன்னிலைக்கு அழைத்து சென்றார்.
பின் தங்கிய நிலையில் இருந்த இந்தியாவுக்கு ஆட்டத்தின் 25ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி குர்ஜித் கவுர் கோல் அடித்தார்.
இந்தியாவின் எழுச்சி
இதனால் எழுச்சி அடைந்த இந்தியாவுக்கு ஆட்டத்தின் 26ஆவது நிமிடத்தில் மற்றொரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதனை கச்சிதமாக பயன்படுத்திக்கொண்ட குர்ஜித் கவுர் இரண்டாவது கோலை அடித்து அசத்தினார்.
தொடர்ச்சியாக அடிக்கப்பட்ட 2 கோல்கள் இந்திய வீராங்கனைகளுக்குள் உத்வேகம் அளிக்க ஆட்டத்தில் அனல் பறந்தது. போட்டியின் 29ஆவது நிமிடத்தில் கட்டாரியாவும் ஒரு கோல் அடிக்க 3-2 என இந்தியா முன்னிலை வகித்தது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விளையாடிய கிரேட் பிரிட்டன் சார்பில் அந்த அணியின் ப்யர்ன் வெப் ஆட்டத்தின் 30ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் ஸ்கோர் கார்டு 3-3 என்ற சமநிலைக்கு வந்தது.
இந்தியாவின் வீழ்ச்சி
தொடர்ந்து விளையாடிய கிரேட் பிரிட்டன் அணிக்கு ஆட்டத்தின் 48ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி பால்ஸ்டன் கோல் அடித்தார். இதன் மூலம் 4-3 என்று மீண்டும் முன்னிலைக்கு வந்தது.
இதனைத் தொடர்ந்து கோல் அடித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் விளையாடிய இந்திய வீராங்கனைகளால் மேற்கொண்டு கோல் ஏதும் அடிக்க முடியவில்லை. எனவே, தி கிரேட் பிரிட்டன் அணி 4-3 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தியது. இதன் மூலம் இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை இழந்துள்ளது.