தூத்துக்குடி : கோவில்பட்டியைச் சேர்ந்த தம்பதியர் சக்திவேல் - சங்கரி. இவர்கள் இருவரும் அப்பகுதியிலுள்ள தீப்பெட்டி தொழிற்சாலையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களது மூத்த மகன் மாரீஸ்வரன், அப்பகுதியிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு பயின்று வருகிறார்.
மேலும் சிறுவயது முதலே விளையாட்டின் மீது ஆர்வம் கொண்ட மாரீஸ்வரன், ஹாக்கி விளையாட்டில் சிறந்து விளங்கத் தொடங்கினார். இவரது திறனைப் பார்த்த ஹாக்கி பயிற்சியாளர் முத்துக்குமார், அவருக்கு தேவையான பயிற்சியை வழங்கி வந்துள்ளார்.
இதன்மூலம் மாவட்டம், மண்டல அளவிலான போட்டிகளில் தடம் பதித்த மாரீஸ்வரனை, தமிழ்நாடு அரசு தேர்ந்தெடுத்து கோவில்பட்டியிலுள்ள பன்னோக்கு உயர் ஹாக்கி மைதான விளையாட்டு விடுதியில் இலவசப் பயிற்சியுடன் கூடிய கல்வியை வழங்கி வருகிறது.
தொடர்ந்து ஹாக்கி விளையாட்டில் சிறந்து விளங்கிய மாரீஸ்வரன் தற்போது இந்திய ஜூனியர் ஹாக்கி அணியில் விளையாடுவதற்காகத் தேர்வாகி அசத்தியுள்ளார்.
மேலும், இவருடன் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் என்ற மற்றோரு வீரரும் இந்திய ஜூனியர் ஹாக்கி அணியில் விளையாடத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 20 வருடங்களுக்குப் பிறகு தமிழ்நாட்டிலிருந்து இந்திய ஜூனியர் ஹாக்கி அணிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள இரு வீரர்களும், பயிற்சிக்காக நாளை பெங்களூரு செல்லவுள்ளனர். இத்தகவல் தமிழ்நாடு ஹாக்கி பயிற்சியாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:ஐபிஎல் 2020: டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சு!