டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி போட்டியில் இந்திய அணி நேற்று பெல்ஜியத்தோடு அரையிறுதியில் மோதியது. அரையிறுதியில் வென்று தங்கமோ, வெள்ளியோ இந்தியா பெறுமென்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தனர். ஆனால், பெல்ஜியம் அணி 5-2 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இதனையடுத்து வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் ஜெர்மனியுடன் இந்தியா இன்று மோதியது. போட்டி தொடங்கிய இரண்டாவது நிமிடத்திலேயே ஜெர்மனியின் ஒர்ஸ் முதல் கோல் அடிக்க ஆட்டத்தின் 17ஆவது நிமிடத்தில் இந்தியாவின் சிம்ரன்ஜித் சிங் பதில் கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன.
ஜெர்மனி முன்னிலை
தொடர்ந்து போட்டியின் 24ஆவது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் நிக்கலெஸ் வெல்லன் கோல் அடித்து அந்த அணியை முன்னிலைப்படுத்தினார். கோல் அடித்து ஆட்டத்தைச் சமனில் கொண்டுபோக இந்தியா முயற்சிக்க 25ஆவது நிமிடத்தில் ஜெர்மனியின் பென்னடிக்ட் ஃபர்க் மற்றொரு கோல் அடித்து அதிர்ச்சி அளித்தார். இதனால் அந்த அணி 3-1 என முன்னிலை வகித்தது.
ஆட்டத்துக்குள் மீண்டும் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள இந்திய அணிக்கு உடனடியாக கோல்கள் தேவைப்பட்ட சூழலில் 27ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி இந்திய வீரர் ஹர்திக் சிங் கோல் அடித்தார்.
இதனால் உற்சாகமடைந்த இந்திய வீரர்கள் ஆட்டத்தில் அனல் பறந்தது. அதற்கு கைமேல் பலனாக 29ஆவது நிமிடத்தில் கிடைத்த மற்றொரு பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி ஹர்மன்ப்ரீத் சிங் கோல் அடித்தார். இதனால் இரண்டாம் கால் பாதியை இரு அணிகளும் 3-3 என்று சமநிலையில் முடித்தன.
இந்திய அணியின் அனல் பறந்த ஆட்டம்
மூன்றாவது கால் பாதி தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஆட்டத்தின் 31ஆவது நிமிடத்தில் இந்திய அணி தரப்பில் ருப்பிந்தர் பால் சிங் 4ஆவது கோல் அடித்து அதகளப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து, ஆட்டத்தின் 31ஆவது நிமிடத்தில் சிம்ரன்ஜித் சிங் தனக்காக இரண்டாவது கோலையும், அணிக்காக 5ஆவது கோலையும் அடித்து அசத்தினார். இதன் மூலம் இந்திய அணி 5-3 என்று வலுவான முன்னிலை வகித்தது.
இச்சூழலில், போட்டியின் 48ஆவது நிமிடத்தில் ஜெர்மனியின் விண்ட்ஃபெடர் கோல் அடிக்க ஜெர்மனிக்கு நம்பிக்கை பிறந்தது. ஆனாலும் அந்த அணி அடுத்தடுத்து கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் பலனளிக்காததால், இந்திய அணி 5-4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது.
இதன்மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது. 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் இந்திய அணி பதக்கம் வென்றதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். பதக்கம் வென்ற இந்திய ஆண்கள் ஹாக்கி அணிக்குப் பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்துவருகின்றனர்.