ஒலிம்பிக் போட்டிகள் எப்போதெல்லாம் தொடங்குகிறதோ அப்போதெல்லாம் இந்திய ஹாக்கி அணி பற்றிய பேச்சுகள் அதிகமாக எழும். எப்படியும் ஒரு பதக்கம் நிச்சயம் என நம்பிக்கையுடன் மக்கள் இருப்பார்கள். ஆனால், இந்திய ஹாக்கி அணி தங்கப்பதக்கம் வென்று 40 ஆண்டுகள் ஆகிவிட்டன. கடைசியாக மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் தொடரில்தான் இந்திய அணி தங்கத்தைக் கைப்பற்றியது.
ஆனால், இம்முறை எஃப்.ஐ.ஹெச். தொடரில் முன்னணி அணிகளை இந்திய அணி வீழ்த்தியுள்ளதால், ஒலிம்பிக் தொடரில் எப்படியும் தங்கத்தைக் கைப்பற்றும் என்ற நம்பிக்கை மீண்டும் பிறந்துள்ளது. இதுகுறித்து இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சர்தார் சிங் பேசுகையில், ''நான் இந்திய அணிக்காக 314 போட்டிகளில் விளையாடிவிட்டேன். ஆனால், ஒலிம்பிக் மெடலை வெல்லாமல் இருப்பது இன்று வரை எனக்கு ஏமாற்றம்தான். கடந்த ஆண்டிலிருந்து இந்திய அணி ஒவ்வொரு ஆட்டத்திலும் சிறப்பாக ஆடிவருகிறது. பலத்தைத் தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
எஃப்.ஐ.ஹெச். ப்ரோ லீக் தொடரில் விளையாடியதைப் பார்த்திருந்தால் அனைவருக்கும் நான் கூறுவது புரிந்திருக்கும். அதனால் மன்பீர்த் சிங் தலைமையிலான இந்திய அணி, ஒலிம்பிக் தொடரில் தங்கத்தைக் கைப்பற்றும் என்ற நம்பிக்கை அதிகமாக உள்ளது.
இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்பதுதான் விளையாட்டு வீரர்களின் கனவாக உள்ளது. அதனால் டோக்கியோ ஒலிம்பிக்கில் நிச்சயம் எங்களின் முழுத்திறனையும் வெளிப்படுத்துவோம். ஹாக்கியைப் பொறுத்தரவரையில் அடுத்த ஆண்டு மிகவும் கடினமாக இருக்கும்.
ஏனென்றால், புதிய திறமைளைக் கண்டறிவதில் பல பிரச்னைகள் ஏற்படும். தற்போதைய சூழலில் ராஜ்குமார், திப்ரீத், விவேக் சாகர், குர்சாகிப் ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடுகின்றனர். அவர்களை ப்ரோ லீக் போட்டிகளில் ஆட வைத்தது பயிற்சியாளர் கிரகம் ரெய்ட் மிகச் சரியாகப் பயன்படுத்திவருகிறார்'' என்றார்.
இதையும் படிங்க: ஒலிம்பிக் தொடருக்கான ஹாக்கி அட்டவணை: முதல் போட்டியில் நியூசி.யை எதிர்கொள்ளும் இந்தியா!