பார்சிலோனா அணியின் ஓர் அங்கமாக இருப்பவர் மெஸ்ஸி. அர்ஜென்டினாவை சேர்ந்த இவர் 2005 முதல் தற்போது வரை பார்சிலோனா அணிக்காக விளையாடி பல கோப்பைகளை வென்று தந்துள்ளார்.
அண்மையில் தொழில்முறை கால்பந்து போட்டிகளில் 700 கோல் அடித்த ஏழாவது வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். பார்சிலோனா அணிக்காக 630 கோல்களையும், அர்ஜென்டினா அணிக்காக 70 கோல்களையும் அவர் அடித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில சீசன்களாக பார்சிலோனா அணியின் ஆட்டத்திறன் கடும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது. குறிப்பாக நடப்பு சீசனின் தொடக்கத்தில் அந்த அணியின் ஆட்டத்திறன் படு மோசமாக இருந்தது.
இதன் காரணமாக அந்த அணியின் பயிற்சியாளர் எர்னஸ்டோ வால்வர்டே அதிரடி பணிநீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக கேகே செட்டியன் பார்சிலோனா அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். பயிற்சியாளர்கள் மாறினாலும் பார்சிலோனா அணியின் தலைவிதி மாறவே இல்லை. மெஸ்ஸியின் ஆட்டத்தைச் சார்ந்தே அந்த அணி இருப்பதாக கால்பந்து வல்லுநர்கள் கருத்து தெரிவித்தனர்.
தற்போது நடைபெற்று வரும் 2019-20 லா லிகா கால்பந்து தொடரில் பார்சிலோனா அணி 33 போட்டிகளில் 70 வது புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில்தான் உள்ளது. மறுமுனையில் பார்சிலோனா அணியின் பரம எதிரியான ரியல் மாட்ரிட் அணி 33 போட்டிகளில் 74 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. இதனால், புள்ளிகள் அடிப்படையில் பார்க்கும்போது பார்சிலோனா அணி நடப்பு இலாபத்தை கைப்பற்றுவது கடினம் என தெரிகிறது.
பார்சிலோனா அணியுடனான மெஸ்ஸியின் ஒப்பந்தம் 2021இல் முடிவடைகிறது. இவர் தனது ஒப்பந்தத்தை அணியுடன் நீடிப்பார் என எதிர்பார்க்கபடும் நிலையில், தற்போது பார்சிலோனா அணிக்குள் பல்வேறு பிரச்னைகள் காரணமாக மெசி தனது ஒப்பந்தத்தை நீட்டிக்க போவதில்லை என ஸ்பெயின் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் 33 வயதான மெஸ்ஸி பார்சிலோனா அணியிலிருந்து வேறு அணிக்கு மாறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இது குறித்து ரியல் மாட்ரிட் அணியின் பயிற்சியாளர் ஜிடேன் கூறுகையில், அவரது ஒப்பந்தத்தில் அடுத்து என்ன நடக்கும் என்பது எனக்கு தெரியவில்லை.
அவர் ஒப்பந்தத்தை நீட்டிப்பது நீட்டி காமல் இருப்பதும் அவரது தனிப்பட்ட முடிவாகும். ஆனால் என்னை பொருத்தவரையில் அவர் பார்சிலோனா அணியில் தான் இருக்க வேண்டும். அவரைப் போன்ற சிறந்த வீரர் தொடர்ந்து இந்த தொடரில் (லா லிகா) விளையாட வேண்டும் என்றார்.