இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடர் இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நாளை (ஜன.17) நடைபெறும் லீக் ஆட்டத்தில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் மான்செஸ்டர் யுனைடெட் அணி, இரண்டாம் இடத்தில் இருக்கும் லிவர்பூல் எஃப்சி அணியை எதிர்கொள்ளவுள்ளது.
இபிஎல் புள்ளிப்பட்டியலில் அடுத்தடுத்து முதல் இரு இடங்களில் உள்ள அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளதால், இப்போட்டியில் வெற்றி பெற்று யார் முதலிடத்திற்கு முன்னேறுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து பேசிய லிவர்பூல் எஃப்சி அணியின் மேலாளர் ஜூர்கன் க்ளோப் (Jurgen Klopp), "கால்பந்து போட்டியில் வெல்ல வேண்டும், அதுவும் மான்செஸ்டருக்கு எதிரான போட்டியில் வெல்ல வேண்டும் என்பதே எங்களின் இப்போதைய குறிக்கோள். அதனால் இப்போட்டிக்காக கூடுதலாக எதையும் நாங்கள் சேர்க்க விரும்பவில்லை. நாங்கள் எங்களுடைய சொந்த மைதானத்தில் விளையாடவுள்ளதால், அதில் வெற்றி பெற விரும்புகிறோம்.
புள்ளிப்பட்டியலில் மான்செஸ்டர் யுனைடெட் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அவர்கள் தகுதியானவர்கள்தான். ஆனாலும் இந்த சீசன் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. அதனால் நங்கள் வெற்றிகளை குவித்தால், அவர்களை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடிக்க முடியும். நாளைய போட்டி கடுமையானதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் மான்செஸ்டர் யுனைடெட் சிறப்பான அணி. அவர்களை வீழ்த்துவதற்கு நிச்சயம் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது அவசியம்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கபா டெஸ்ட்: தடுமாற்றத்தில் இந்திய அணி!