சீரி ஏ கால்பந்து தொடர் இத்தாலியின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஜன.07) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜுவென்டஸ் அணி - ஏசி மிலான் அணியை எதிர்கொண்டது.
பரபரப்புடன் தொடங்கிய இந்தப் போட்டியில் ஜுவென்டஸ் அணி ஆரம்பம் முதலே தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தத் தொடங்கியது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபெடரிகோ சிசா ஆட்டத்தின் 19ஆவது நிமிடத்தில் கோலடித்து அணியின் கோல் கணக்கை தொடங்கிவைத்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஏசி மிலான் அணியின் டேவிட் ஆட்டத்தின் 41ஆவது நிமிடத்தில் கோலடிக்க, முதல் பாதி ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதியிலும் அசத்தலான அட்டத்தை வெளிப்படுத்திய ஃபெடரிகோ சிசா ஆட்டத்தின் 62ஆவது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோலடித்து அசத்தினார்.
அதன்பின் ஆட்டத்தின் 76ஆவது நிமிடத்தில் ஜுவென்டஸ் அணிக்கு வெஸ்டன் மூலம் மேலும் ஒரு கோல் கிடைத்தது. இறுதிவரை போராடிய ஏசி மிலான் அணியால் எதிரணியின் டிஃபென்ஸைத் தாண்டி கோலடிக்க முடியவில்லை.
இதனால் ஆட்டநேர முடிவில் ஜுவென்டஸ் அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஏசி மிலான் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஜுவென்டஸ் அணி 30 புள்ளிகளைப் பெற்று சீரி ஏ புள்ளிப்பட்டியலின் 4ஆம் இடத்திற்கு முன்னேறியது.
இப்போட்டியில் ஏசி மிலான் அணி தோல்வியைச் சந்தித்திருந்தாலும், 37 புள்ளிகளுடன் சீரி ஏ கால்பந்து தொடரின் புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அபுதாபி ஓபன்: சீசனின் முதல் வெற்றியைப் பெற்ற கசட்கினா!