உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் பெருந்தொற்றால் பல்வேறு விளையாட்டு போட்டிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. கடந்த மார்ச், ஏப்ரல் மாதத்தில் இத்தொற்றின் தாக்கம் ஸ்பெயினில் அதிகரித்துவந்ததால், மார்ச் 24ஆம் தேதியிலிருந்து லா லிகா கால்பந்து தொடர் தேதி குறிப்பிடபடாமல் தள்ளிவைக்கப்பட்டது.
இத்தொற்றின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் அந்நாட்டில் மே 4 ஆம் வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்தநிலையில், இரண்டு மாதங்களுக்கு பிறகு இம்மாத தொடக்கத்தில் ஸ்பெயினில் கரோனா வைரஸின் பாதிப்புகள் குறையத் தொடங்கியது. இதனால், மே 4ஆம் தேதியோடு ஊரடங்கு நீக்கப்பட்டது.
பின்னர், மே 4ஆம் தேதி முதல் லா லிகா கால்பந்து அணிகள் தங்களது மைதானங்களில் வீரர்களுக்கான பயிற்சியை மேற்கொள்ள ஸ்பெயின் அனுமதி வழங்கியது. பயிற்சி தொடங்குவதற்கு முன்னதாக பார்சிலோனா வீரர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவர்களுக்கு கரோனா இல்லை என முடிவுகள் தெரியவந்தபிறகுதான் பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று தொடர்ந்து ஐந்தாவது நாள்களாக பார்சிலோனா அணியின் வீரர்கள் மைதானங்களில் பந்தை பாஸ் செய்தும், கோல் அடித்தும் தனித்தனியே பயிற்சிகளை மேற்கொண்டனர். இதில், பார்சிலோனா அணியின் கேப்டன் மெஸ்ஸி, முன்கள வீரர்களான க்ரீஸ்மேன், சுவாரஸ், அன்ஸூ ஃபாட்டி, நடுகள வீரர்களான புஸ்கட்ஸ், டி ஜாங், விடால், கோல்கீப்பர் டெர்ஸ்டேகன் என, பார்சிலோனா குழுவில் உள்ள அனைத்து வீரர்களும் தனித்தனியே பயிற்சி பெற்றனர்.
இதனிடையே, நிறுத்திவைக்கப்பட்டிருந்த நடப்பு சீசனுக்கான லா லிகா தொடர் ஜூன் 20ஆம் தேதி முதல் தொடங்கும் என தகவல் வெளியாகியது. 2019-20 சீசனுக்கான புள்ளிகள் பட்டியலில் பார்சிலோனா நடப்பு சாம்பியன் பார்சிலோனா அணி 27 போட்டிகளில், 18 வெற்றி, நான்கு டிரா, ஐந்து தோல்வி என, 58 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ரியல் மாட்ரிட் அணி 27 போட்டிகளில் 16 வெற்றி, எட்டு டிரா, மூன்று தோல்வி என 56 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இதையும் படிங்க:ஜெர்மனியில் மே 16 முதல் பண்டஸ்லிகா தொடர் தொடக்கம்!