ஸ்பெயினில் 2019-20 சீசனுக்கான லா லிகா கால்பந்து தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. தொடரில் 34 லீக் சுற்றுப் போட்டிகள் முடிவடைந்த நிலையில், இன்னும் நான்கு சுற்று போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ளன.
நேற்று நடைபெற்ற லீக் போட்டி ஒன்றில் ரியல் மாட்ரிட் அணி அத்லெடிக்கோ பில்பாவோ அணியுடன் மோதியது. இதில் ஆட்டத்தின் 76ஆவது நிமிடத்தில் வார் (வீடியோ உதவி நடுவர்) முறைப்படி ரியல் மாட்ரிட் அணிக்கு பெனால்டி வழங்கப்பட்டது.
இதனை அந்த அணியின் கேப்டன் சேர்ஜியோ ராமோஸ் கோலாக மாற்ற ரியல் மாட்ரிட் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதனிடையே, இப்போட்டியில் சேர்ஜியோ ராமோஸ் செய்த ஃபவுலிற்கு அத்லெடிக்கோ பில்பாவோ அணிக்கு பெனால்டி கிக் வழங்க வார் தவறிவிட்டதால் பெரும் சர்ச்சையானது.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு லீக் போட்டியில், நடப்புச் சாம்பியன் பார்சிலோனா அணி 4-1என்ள கோல் கணக்கில் வில்லாரியல் அணியை தோற்கடித்தது. இருப்பினும் புள்ளிகள் தரவரிசை பட்டியலில் ரியல் மாட்ரிட் அணி 77 புள்ளிகளுடன் முதலிடத்திலும், பார்சிலோனா அணி 73 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளது.
இந்நிலையில், தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ரியல் மாட்ரிட் அணிக்கு சாதகமாகவே வார் (வீடியோ உதவி நடுவர்) முறை இருப்பதாக பார்சிலோனா அணியின் தலைவர் ஜோசப் பார்டோமியூ குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
"உலகின் மிகச்சிறந்த லீக் தொடரான லா லிகாவில் நேற்றைய ரியல் மாட்ரிட் அணி போட்டியில் வார் முறையின் தீர்ப்பைக் கண்டு மோசமாக உணர்ந்தேன். கரோனா வைரஸுக்குப் பிறகு தொடர் தொடங்கியதிலிருந்து வார் முறையில் நியாயம் இல்லாததால் சில போட்டிகளின் முடிவுகள் முற்றிலும் மாறிவிட்டன. இந்த வார் முறையில் எப்போதும் ரியால் மாட்ரிட் அணிக்கு சாதகமாகவே தீர்ப்பு வழங்கப்படுகிறது" என்றார்.
கால்பந்து போட்டிகளில், வீரர்கள் கோல் அடிக்கும் போது ஆஃப் சைட்டில் உள்ளார்களா என்பதையும், வீரர்கள் கோல் கீப்பரின் பகுதிக்குள் ஃபவுல் எதும் செய்கிறார்களா என்பதை கண்காணிக்கவும் இந்த வார் முறை பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.