சர்வதேச கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான்கள் பட்டியலில் முக்கியப் பங்கு வகித்தவர் அர்ஜென்டினாவின் டியாகோ மாரடோனா. இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன் அவரது மூளையில் ஏற்பட்ட ரத்தம் உறைதலுக்கு சிகிச்சைப் பெற்று முடித்து வீடு திரும்பிய மாரடோனா, நேற்று (நவ. 25) மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவிற்குப் பல்வேறு விளையாட்டு வீரர்களும் பல நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில் இன்று அவரது இறுதி ஊர்வலம் புவெனஸ் அயர்ஸிலுள்ள காசா ரோசாடா அதிபர் நிர்வாக மாளிகையில் நடைபெற்றது. காலை 9.15 மணிக்கு தொடங்கிய இந்த இறுதிச்சடங்கில் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், நண்பர்களுக்கு சில மணி நேரம் ஒதுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அதிபர் அலுவலகத்தின் முக்கியக் கூடத்தில் வைக்கப்பட்டிருந்த மாரடோனாவின் உடலுக்கு, அந்நாட்டின் தேசியக்கொடி, அர்ஜென்டினா கால்பந்து அணியின் 10ஆம் எண் ஜெர்சி ஆகியவை போர்த்தப்பட்டது.
இதனையடுத்து மாரடோனாவின் மகள், அவரது நண்பர்கள், அர்ஜென்டினா கால்பந்து வீரர்கள், முன்னாள் அணி வீரர்கள், முக்கியப் பிரபலங்கள் முதலில் தங்களது இறுதி அஞ்சலியைச் செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காகத் திரண்டிருந்த மக்கள் ஒருவர் பின் ஒருவராக தாங்கள் கொண்டுவந்த பதக்கங்கள், வெவ்வேறு கால்பந்து அணிகளைச் சேர்ந்த ஜெர்சிகளை கண்ணீருடன் சவப்பெட்டியின் அருகே வைத்து அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டதும், அனைவரும் ஒரே நேரத்தில் அஞ்சலி செலுத்த அலைமோதினர். இதனால் காவலர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி காவல் துறையினர் பொதுமக்களைக் கட்டுப்படுத்தினர். இதனால் இறுதிச் சடங்கு நிகழும் இடத்தில் சற்று பதற்றமான சூழல் உருவானது.
தொடர்ந்து பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தவருவதால் அதிபர் அலுவலகம் முழுவதும் ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:‘கடவுளின் கை’ டியாகோ மாரடோனாவின் வாழ்க்கைப் பயணம்!