ஸ்பெயினில் நடப்பு சீசனுக்கான லா லிகா கால்பந்து தொடரில் போட்டிகளை திங்கட்கிழமையிலும் வெள்ளிக்கிழமைகளிலும் நடத்த லா லிகா நிர்வாகம் முடிவு செய்தது. ஆனால், ஸ்பானிஷ் கால்பந்து சம்மேளனம் இதனை நிராகரித்தது. அப்படி திங்கட்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் போட்டிகளை நடத்தினால் ரசிகர்களுக்கு சிக்கலாக இருக்கும் எனக் கூறியது.
தொலைக்காட்சி உரிமம் மூலம் கிடைத்த வருவாயில் பெரும் பங்கு வேண்டும் என ஸ்பானிஷ் கால்பந்து சம்மேளனம் விரும்புவதாக லா லிகா நிர்வாகம் குற்றஞ்சாட்டியது மட்டுமின்றி போட்டிகளை திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை நடத்தக் கோரி நீதிமன்றத்தை நாடியது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இவ்வழக்கை விசாரித்த மாட்ரிட் நீதிமன்றம், வெள்ளிக்கிழமைகளில் லீக் போட்டிகளை நடத்த அனுமதி வழங்கியது. ஆனால் திங்கிட்கிழமைகளில் நடத்த அனுமதி மறுத்தது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த மாட்ரிட் நீதிபதி ஆண்ட்ரேஸ் சான்செஸ் ஸ்பானிஷங் கால்பந்து சம்மேளனத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியுள்ளார். அந்த தீர்ப்பில் அவர், "போட்டிகளை சனி, ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர்த்து வேறு எந்த நாள்களிலும் போட்டி நடந்தால் லா லிகா தொடரை நிறுத்துவதற்கான அதிகாரம் ஸ்பானிஷ் கால்பந்து கூட்டமைப்புக்கு இருக்கிறது" என குறிப்பிட்டிருந்தார்.
இந்த தீர்ப்பு தங்களுக்கு அதிகபட்ச திருப்தி அளித்ததாக ஸ்பானிஷ் கால்பந்து சம்மேளனம் தெரிவித்தது. இது குறித்து அந்த சம்மேளனம் வெளியிட்ட அறிக்கையில், "கரோனா வைரஸ் காரணமாக நடப்பு லா லிகா சீசன் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த தொடர் மீண்டும் (ஜூன் 8ஆம் தேதி) தொடங்கும் போது போட்டிகளை அனைத்து நாள்களிலும் நடத்த லா லிகா நிர்வாகத்திற்கு ஸ்பானிஷ் கால்பந்து சம்மேளனம் அனுமதி வழங்குகிறது. தற்போதைய சூழலில் எந்தவொரு பிரச்னையும் இல்லாமல் நடப்பு சீசன் தொடரை நடத்தி முடிக்க வேண்டும் என்பதையே இந்த சம்மேளனம் விரும்புகிறது.
ஒருவேளை அடுத்த சீசன் தொடரும் பார்வையாளர்களின்றி நடைபெற்றால் போட்டிகள் அனைத்து நாள்களிலும் நடத்த ஸ்பானிஷ் கால்பந்து சம்மேளனம் அனுமதி வழங்கும். ஆனால் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் போட்டிகளை தடுக்க எங்களுக்கு அதிகாரம் உள்ளது" என குறிப்பிட்டிருந்தது.
நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மரியாதை நிமித்தமாக தாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் இந்த தீர்ப்பில் தங்களுக்கு வேறுபாடு இருப்பதாக லா லிகா நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக தாங்கள் மேல்முறையீடு செய்யப்போவதாகவும் தெரிவித்துள்ளது.
போட்டிகளின் தேதிகள், நேரங்களை நிர்ணயிக்கும் அதிகாரம் எங்களுக்கு இருப்பதாக லா லிகா நிர்வாகம் தெரிவித்தது. ஆனால், போட்டிகளின் நேரத்தை தேர்வு செய்ய மட்டுமே உங்களுக்கு அதிகாரம் இருக்கிறது, நாள்களை தேர்வுசெய்ய அல்ல என ஸ்பானிஷ் கால்பந்து சம்மேளனம் கூறியது.
கடந்த மூன்று ஆண்டுகளாக லா லிகா தொடரின் தொலைக்காட்சி உரிமத்தின் மதிப்பு இரண்டு பில்லியன் யூரோக்களுக்கும் மேல் உள்ளது. கூடுதல் நாட்களில் போட்டிகளை நடத்துவதற்கு லா லிகா நிர்வாகம் தரப்பில் 30 மில்லியன் யூரோக்கள் வழங்க வேண்டும் என ஸ்பானிஷ் கால்பந்து சம்மேளனம் தெரிவித்திருந்தது. ஆனால் இந்த தொகை மிக அதிகமாக இருப்பதாக லா லிகா நிர்வாகத்தினர் கருதுகின்றனர்.
கரோனா வைரஸால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நடப்பு லா லிகா சீசன் ஜூன் 8ஆம் தேதி முதல் பார்வையாளர்களின்றி நடைபெறும் என ஸ்பானிஷ் கால்பந்து சம்மேளனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எங்க ஆட்டம் எப்பவும் வெறித்தனமா இருக்கும்’ - கால்பந்திலிருந்து காக்கிக்கு மாறிய இந்துமதி கதிரேசன்!