கடந்த இரண்டு மாதங்களாக ஸ்பெயினை ஆட்டிப்படைத்துவந்த கரோனா வைரசின் (தீநுண்மி) தாக்கம் தற்போது குறைந்துள்ளது. இதன் பலனாக, கடந்த மே 4ஆம் தேதியிலிருந்து லா லிகா கால்பந்து அணிகள் தங்களது மைதானங்களில் வீரர்களுக்கான பயிற்சியை மேற்கொள்ள ஸ்பெயின் அனுமதி வழங்கியது.
இதைத்தொடர்ந்து, பார்சிலோனா, ரியல் மாட்ரிட், அத்லெடிக்கோ மாட்ரிட் உள்ளிட்ட அனைத்து அணிகளும் தங்களது சொந்த மைதானங்களில் கடுமையான நெறிமுறைகளைக் கடைப்பிடித்து பயிற்சி செய்துவருகின்றன.
இந்நிலையில், நடப்புச் சீசனுக்கான லா லிகா பட்டத்தை வெல்ல ரியல் மாட்ரிட் அணி கடுமையாகப் போராடும் என அந்த அணியின் கோல்கீப்பர் திபாவுட் கோர்டியோஸ் தெரிவித்துள்ளார்.
பெல்ஜியத்தைச் சேர்ந்த இவர் 2018 ஜூலை மாதம் ரியல் மாட்ரிட் அணிக்கு ஒப்பந்தமானார். லா லிகாவில் அவரது முதல் சீசனில் (2018-19) பார்சிலோனா அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.
இதனால், அவரது இரண்டாவது சீசனிலாவது ரியல் மாட்ரிட் அணி சாம்பியன் பட்டம் வெல்லுமா என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
2019-20 சீசனுக்கான புள்ளிகள் பட்டியலில் நடப்புச் சாம்பியன் பார்சிலோனா அணி 27 போட்டிகளில், 18 வெற்றி, நான்கு டிரா, ஐந்து தோல்வி என 58 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
இதைத்தொடர்ந்து, ரியல் மாட்ரிட் அணி 27 போட்டிகளில் 16 வெற்றி, எட்டு டிரா, மூன்று தோல்வி என 56 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இதனிடையே, ஜெர்மனியில் நடப்புச் சீசனுக்கான பண்டஸ்லிகா கால்பந்து தொடர் கடந்த 17ஆம் தேதி தொடங்கியது. இதேபோல், ஸ்பெயினிலும் லா லிகா தொடர் ஜூன் 20 முதல் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: பார்வையாளர்கள் இருக்கையில் 'செக்ஸ் டால்ஸ்' - மன்னிப்புக் கோரிய தென் கொரிய கால்பந்து கிளப்!