கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் இங்கிலாந்து போன்ற ஒரு சில நாடுகளில் வைரஸின் தாக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதால், விளையாட்டு வீரர்கள் தங்களது பயிற்சியை மேற்கொள்ளவும், பார்வையாளர்களின்றி விளையாட்டு போட்டிகளை நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இதையடுத்து 80 நாள்களுக்கு மேலாக ஒத்திவைக்கப்பட்டிருந்த இங்கிலிஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடர் தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அந்தவகையில், மீண்டும் தொடங்கப்பட்ட பிரீமியர் லீக் கால்பந்து சீசனின் ஜூலை 4 ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரையிலான போட்டி அட்டவணையை பிரீமியார் லீக் கூட்டமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், இப்போட்டிகளுக்கு முன்னதாக அனைத்து வகையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தால் மட்டுமே, போட்டிகள் நடைபெறுவது உறுதிசெய்யப்படும் என்றும் அந்தக் கூட்டமைப்பு அறிக்கை தெரிவித்துள்ளது.