நிகழாண்டு (2019-20) சீசனுக்கான இங்லீஷ் பிரீமியர் லீக் (இபிஎல்) தொடரின் நேற்றைய முன்தின (ஜூலை 15) போட்டியில் புதிய சாம்பியன் லிவர்பூல் அணி, அர்சனல் அணியுடன் மோதியது.
இந்த சீசனில் அதிக புள்ளிகளைப் பெற்று சாம்பியனான லிவர்பூல் அணி இப்போட்டியில் வெற்றி பெற்றால் 100 புள்ளிகளைப் பெற்றிருக்கும். அப்படி நடந்திருந்தால் இபிஎல் தொடரில் 100 புள்ளிகளைப் பெற்ற இரண்டாவது அணி என்ற சாதனையை லிவர்பூல் அணி படைத்திருக்கும்.
ஆனால் தனது மோசமான தடுப்பாட்டத்தால் லிவர்பூல் அணி இச்சாதனையை நழுவவிட்டது. ஆட்டத்தின் 20ஆவது நிமிடத்தில் லிவர்பூல் அணியின் முன்கள வீரர் மானே கோல் அடித்தார். ஆனால் அதற்கு பிறகான ஆட்டத்தில் லிவர்பூல் அணி தடுப்பாட்டத்தில் சொதப்பியது.
குறிப்பாக ஆட்டத்தின் 32 ஆவது நிமிடத்தில் லிவர்பூல் அணியின் சென்டர் பேக் (தடுப்பு வீரர்) விர்ஜில் வான் டைக்கின் தவறான பாஸால் அர்சனல் வீரர் அலெக்சாண்டர் லாகாஸட்டே போன் அடித்தார்.
பின்னர் லிவர்பூல் அணியின் கோல்கீப்பர் ஆலிசன் செய்த தவறைப் பயன்படுத்திக் கொண்ட அர்சனல் வீரர் ரீஸ் நெல்சன் கோலாக மாற்றினார். இறுதியில் அர்சனல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் அணியை வீழ்த்தியது.