கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக, இந்தியா முழுவதும் மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால், நாடு முழுவதும் நடைபெறவிருந்த விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் போக்குவரத்து முற்றிலுமாக முடக்கப்பட்டும் உள்ளது.
இந்நிலையில் கேரளாவில் நடைபெறவிருந்த செவன்ஸ் கால்பந்துத் தொடரின் இந்தாண்டுக்கான சீசன் முற்றிலுமாக கைவிடப்பட்டது. மேலும் இத்தொடரில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளிலிருந்து வந்திருந்த 200க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வீரர்கள், தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல், கேரளாவின் மலப்புரம் மாவட்டத்திலேயே தஞ்சமடைந்துள்ளனர்.
இதனையடுத்து, செவன்ஸ் கால் பந்து கூட்டமைப்பு நிர்வாகிகளும், வீரர்களுக்கான ஸ்பான்ஸர்களும் வீரர்களை பத்திரமாக, அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும்படி, மத்திய அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அணி நிர்வாகிகள் கூறுகையில், 'செவன்ஸ் கால்பந்துத் தொடரில் பங்கேற்க வந்த வெளிநாட்டு வீரர்களுக்கான தங்குமிடம், உணவு ஆகியவை தன்னார்வலர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் மூலம் வழங்கப்படுகிறது. இவ்வீரர்கள் தங்களது சொந்த நாடுகளுக்குச் செல்ல அரசு வழிவகை செய்ய வேண்டும்' என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:கரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உலக ரக்பி கூட்டமைப்பு நிதியுதவி!