ஐஎஸ்எல் 6ஆவது சீசன் தொடர் முடிவடைந்ததிலிருந்து ஒடிசா எஃப்.சி. அணி பல்வேறு மாற்றங்களை அணியினுள் ஏற்படுத்தி வருகிறது. சில நாள்களுக்கு முன்னதாக டிஃபெண்டர் கமல்ப்ரீத் சிங்கை ஒப்பந்தம் மேற்கொண்ட ஒடிசா எஃப்.சி. அணி, தற்போது இந்திய அணியின் இளம் மிட் ஃபீல்டர் தொய்பா சிங்கை ஒப்பந்தம் செய்துள்ளது.
இதுகுறித்து ஒடிசா எஃப்.சி. அணியின் தலைவர் ரோஹன் ஷர்மா வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தொய்பா சிங் மிகவும் வித்தியாசமான வீரர். அவரை எங்கள் அணிக்காக ஒப்பந்தம் மேற்கொண்டது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். அவர் மிகவும் இளம் வயதிலேயே ஐ லீக் தொடரின் மினர்வா அணிக்காக ஆடியிருக்கிறார்.
ஏஎஃப்சி கோப்பையில் அறிமுகமான மணிப்பூர் வீரர்களிலேயே மிகவும் இளமையானவர் தொய்பா சிங்தான். அவர் எங்கள் அணியின் பயிற்சியாளரான வினித் கீழ் பயிற்சி பெறுவார். எங்கள் கிளப்பிற்கு ஏற்றவாறு சிறந்த வீரராக எதிர்காலத்தில் வலம் வருவார்'' என்றார்.
இந்த ஒப்பந்தம் பற்றி தொய்பா சிங் பேசுகையில், ''ஒடிசா அணிக்காக ஐஎஸ்எல் தொடரில் முதல்முறையாக பங்கேற்க இருப்பது மகிழ்ச்சி. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இந்திய அணிக்குள் செல்ல முயற்சிப்பேன். ஒடிசா அணியில் செலவழிக்கும் ஒவ்வொரு நிமிடத்திலும் நிச்சயம் ஏதாவது கற்றுக்கொண்டே இருப்பேன்'' என்றார்