ஐ லீக் கால்பந்து தொடரின் இன்றைய ஆட்டத்தில் மோகன் பகன் அணியை எதிர்த்து ஐஸ்வால் எஃப்.சி. அணி ஆடுகிறது. 13 ஆட்டங்களாக மோகன் பகன் அணி தொடர்ந்து வெற்றிபெற்று வரும் நிலையில் இன்று நடக்கவுள்ள ஆட்டத்தில் வென்றால், ஐ லீக் கோப்பையைக் கைப்பற்றும்.
15 போட்டிகளில் ஆடியுள்ள மோகன் பகன் அணி 36 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இதனால் கோப்பையைக் கைப்பற்றுவதற்கு இரண்டு புள்ளிகள் மட்டுமே தேவை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த போட்டியில் சென்னை சிட்டி எஃப்.சி. அணியை எதிர்த்து ஆடிய மோகன் பகன் அணி 1-1 என்ற கணக்கில் டிரா செய்தது.
இன்றைய ஆட்டம் பற்றி மோகன் பகன் பயிற்சியாளர் கிபு விகுனா பேசுகையில், ''நாங்கள் இன்னும் கோப்பையை வெல்வது பற்றி சிந்திக்கவில்லை. இன்றைய ஆட்டத்தில்தான் எங்களது சிந்தனை உள்ளது. ஐஸ்வால் அணி அதிகமான வலிமையுடன் உள்ளது'' என்றார்.
மேலும் ஐஸ்வால் அணியின் பயிற்சியாளர் ஸ்டான்லி பேசுகையில், ''இந்தப் போட்டியில் ப்ரஷர் மோகன் பகன் அணி மீது மட்டுமே உள்ளது. எங்கள் அணி வீரர்கள் அவர்களை எதிர்க்க தயாராகவே உள்ளனர். நிச்சயம் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் மோகன் பகன் அணி களமிறங்கவுள்ளது அந்த அணிக்கு பின்விளைவுகளை ஏற்படுத்தும்'' என்றார்.
கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் மோகன் பகன் அணியும், மோகன் பகனை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் ஐஸ்வால் அணியும் களமிறங்கவுள்ளது ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஐஎஸ்எல்: இறுதிப்போட்டியோடு ஆண்ட்ரே ஸ்கெம்ப்ரி ஓய்வு