ஸ்பெயின் நாட்டின் புகழ்பெற்ற கால்பந்து தொடரான லாலிகா கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நாடைபெற்ற லீக் ஆட்டத்தில் பார்சிலோனா எஃப்சி அணி - லெவண்டே அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.
மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கிய இப்போட்டியின் முதல் பாதியில் இரு அணி வீரர்களும் சம பலத்துடன் தங்களது திறனை வெளிப்படுத்தி அசத்தினர். இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்காமல் சமனிலையில் இருந்தன.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட பார்சிலோனா எஃப்சி அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி ஆட்டத்தின் 76ஆவது நிமிடத்தில் கோலடித்து அசத்தினார்.
அதன்பின் பார்சிலோனா அணி வலிமையான டிஃபென்ஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணியின் கோலடிக்கும் வாய்ப்புகளை தகர்த்தனர். இதன் மூலம் ஆட்டநேர முடிவில் பார்சிலோனா எஃப்சி அணி 1-0 என்ற கோல் கணக்கில் லெவண்டே அணியை வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் பார்சிலோனா எஃப்சி அணி 17 புள்ளிகளுடன் லாலிகா புள்ளிப்பட்டியலில் எட்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இதையும் படிங்க:டெஸ்ட் தரவரிசை: நூலிழை வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா முதலிடம்!