ஆப்பிரிக்க அமெரிக்கர் ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொல்லப்பட்டதின் எதிரொலியாக நிறவெறிக்கு எதிராக அமெரிக்கா தொடங்கி தற்போது உலகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் வலுத்துவருகின்றன. இதற்கு ஆதரவளிக்கும் விதமாக நேற்று முன்தினம் தொடங்கப்பட்ட ப்ரீமியர் லீக் கால்பந்து தொடரில் கறுப்பின மக்களுக்காக கால்பந்து வீரர்கள் அடையாள எதிர்ப்பைப் பதிவுசெய்தனர்.
மான்செஸ்டர் சிட்டி-ஆர்சனல் அணிகளுக்கு இடையிலான போட்டி முடிந்ததையடுத்து, மான்செஸ்டர் சிட்டி அணியின் உரிமையாளர் பெப் கார்டியாலோ செய்தியாளர்களிடம் பேசினார். அதில், ''கறுப்பின மக்களுக்கு ஆதரவாக பல மில்லியன் செய்திகளை நான் அனுப்ப வேண்டும். 400 ஆண்டுகளுக்கும் மேலாக வெள்ளை இன மக்கள் கறுப்பின மக்களை ஒடுக்குகிறார்கள். அதற்காக நான் வெட்கப்படுகிறேன்.
நடந்துவரும் போராட்டங்கள் அனைத்தும் நாம் மாற்றத்தை நோக்கி சரியான பாதையில் செல்வதைக் காட்டுகிறது. கறுப்பின மக்களுக்கு இதுவரை நாம் செய்யாத உதவிகளை இனி செய்ய வேண்டும்'' என்றார்.