இங்கிலாந்தில் நடந்துவரும் கால்பந்தாட்ட பிரீமியர் லீக் போட்டி நடைபெற்றுவருகிறது. இதில் 20 அணிகள் பங்கேற்று ஆடிவருகின்றன.
இந்நிலையில், மேன்செஸ்டர் சிட்டி-செல்ஸி அணிகளுக்கிடையே லீக் ஆட்டம் நள்ளிரவில் நடைபெற்றது.
போட்டி ஆரம்பித்த நான்காவது நிமிடம் மேன்செஸ்டர் சிட்டியின் ரகீம் ஸ்டெர்லிங் கோல் கணக்கை தொடங்கிவைத்தார். இரு அணிகளும் கடுமையான போட்டியை வெளிப்படுத்தியபோதும் செல்ஸி பயிற்சியாளர் மொரீஸியோ சாரியின் வியூகங்கள் கைக்கொடுக்கவில்லை.
இந்நிலையில் செர்ஜியோ அக்குவெரோ அடுத்தடுத்து 13 மற்றும் 19 நிமிடங்களில் இரு கோல்களை அடித்து எதிரிணியை நிலைகுலையச் செய்தார்.
ஒரு கட்டத்தில் 25 நிமிடத்தில் 4-0 என்ற கோல் கணக்கில் மிக மோசமான நிலையில் இருந்தது.
இதன் பின் செல்ஸி அணி தடுப்பு ஆட்டத்தில் ஈடுபட்டது. இதனால் சிட்டியின் கோல் மழையை சற்று நேரம் தடுக்க முடிந்தது. இருந்தபோதும் இரண்டாம் பாதியில் இரு கோல்களை அடித்து ஆட்டத்தை அபாரமாக வென்றது மேன்செஸ்டர் சிட்டி.
56-வது நிமிடத்தில் செர்ஜியோ அக்குவெரோ கோல் அடித்ததின் மூலம் தனது 11வது ஹட்ரிக்கை பதிவு செய்தார். ஆட்டநேரத்தின் முடிவில் செல்ஸி அணியை 6-0 என்ற கோல் கணக்கில் மேன்செஸ்டர் சிட்டி அணி வென்றது.