பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி - செல்சீ அணிகள் ஆடின. இந்த ஆட்டத்தில் செல்சீ அணி 2-1 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டி அணியை வீழ்த்தியது. இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் மான்செஸ்டர் சிட்டி அணி, மீதமுள்ள 7 போட்டிகளில் வெற்றிபெற்றாலும் முதலிடத்திற்கு செல்ல முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால் 1990ஆம் ஆண்டுக்கு பிறகு லிவர்பூல் அணி பிரீமியர் லீக் கால்பந்து தொடரின் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தியுள்ளது.
30 ஆண்டுகளுக்குப் பிறகு லிவர்பூல் அணி பட்டத்தைக் கைப்பற்றியிருந்தாலும், அந்த அணியின் ரசிகர்கள் தங்களின் மகிழ்ச்சியைக் கொண்டாட முடியாத நிலையில் உள்ளனர். கரோனா வைரஸ் (தீநுண்மி) காரணமாக கொண்டாட்டங்களுக்கு எவ்வித வாய்ப்புகளும் இல்லாமல் உள்ளன.
பிரீமியர் லீக் தொடரில் இதுவரை 7 போட்டிகள் மீதமுள்ள நிலையில், இங்கிலாந்து வரலாற்றிலேயே எந்த அணியும் பட்டத்தைக் கைப்பற்றியது இல்லை. லிவர்பூல் அணி ஆடிய 31 போட்டிகளில் 28 போட்டிகளில் வெற்றிபெற்றும், 2 போட்டிகளை டிரா செய்தும், ஒரே ஒரு போட்டியில் மட்டும் தோல்வியடைந்திருந்தது. தொடரின் தொடக்கம் முதலே ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த லிவர்பூல் அணியை தடுக்க, எந்த அணியாலும் முடியவில்லை.
கடந்தாண்டு சாம்பியன்ஸ் லீக் தொடரை லிவர்பூல் அணி கைப்பற்றியதைத் தொடர்ந்து, இந்தாண்டு பிரீமியர் லீக் தொடரைக் கைப்பற்றி அசத்திவருகிறது. இந்த வெற்றிகளுக்கு லிவர்பூல் அணியின் மேலாளர் ஜார்ஜியான் கிளாப் முக்கியக் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'திருப்புமுனையாக அமைந்தது கபில்தேவின் கேட்ச்தான்' - 1983 ஃபைனல் குறித்து கீர்த்தி ஆசாத்