ஸ்பெயின் நாட்டின் புகழ்பெற்ற கால்பந்து தொடரான லாலிகா விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (மார்ச்.22) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பார்சிலோனா அணி, ரியல் சோசிடாட் அணியுடன் மோதியது.
போட்டியின் தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பார்சிலோனா அணிக்கு, அண்டோனி 37ஆவது நிமிடத்திலும், செர்ஜினோ டெஸ்ட் 43ஆவது நிமிடத்திலும் கோலடித்து அணியை முன்னிலைப்படுத்தினர். இதன்மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் பார்சிலோனா அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது.
அதன்பின் நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்திலும் அபாரமாக விளையாடிய பார்சிலோனா அணியின் கேப்டன் மெஸ்ஸி 56, 89ஆவது நிமிடங்களிலும், உஸ்மானே டெம்பலே 71ஆவது நிமிடத்திலும் கோலடித்து அசத்தினர். இறுதிவரை போராடிய ரியல் சோசிடாட் அணியால் ஒரு கோலை மட்டுமே எடுக்க முடிந்தது. ஆட்டநேர முடிவில் பார்சிலோனா அணி 6-1 என்ற கோல் கணக்கில் ரியல் சோசிடாட் அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.
இப்போட்டியில் பார்சிலோனா அணியின் கேப்டன் லயோனல் மெஸ்ஸி பங்கேற்றதன் மூலம், பார்சிலோனா கிளப் அணிக்காக அதிக போட்டிகளில் பங்கேற்ற நபர் என்ற சாதனையை அவர் படைத்தார். முன்னதாக ஸாவி ஹெர்னான்டெஸ் 767 போட்டிகளில் பங்கேற்றதே சாதனையாக இருந்தது. அதனை தற்போது லயோனல் மெஸ்ஸி (768) முறியடித்து அசத்தியுள்ளார்.
இதையும் படிங்க: IND vs ENG: இந்திய அணிக்கு அபராதம்!