அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் மரடோனா கடந்த புதன்கிழமையன்று மாரடைப்பால் காலமானார். இவருக்கு உலகம் முழுவதும் உள்ள கால்பந்து வீரர்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் லா லிகா நிர்வாகம் தரப்பில் இந்த வார இறுதியில் நடக்கும் அனைத்து போட்டிகளுக்கு முன்பாக மரடோனாவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்படும் என அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், '' மறைந்த கால்பந்து ஜாம்பவான் டியாகோ அர்மாண்டோ மரடோனாவிற்கு மவுன அஞ்சலி செலுத்தும்விதமாக இவ்வார இறுதியில் ஆடப்படும் போட்டிகளுக்கு முன் ஒரு நிமிடம் அமைதியாக இரங்கல் அனுசரிக்கப்படும்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பார்சிலோனா அணிக்காக 1982-1984 வரை இரண்டு சீசன்களை மரடோனா ஆடியுள்ளார். அதிலும் எல் கிளாக்கிகோ போட்டிகளில் இவரது செயல்பாடுகள் இன்று வரை பெஞ்ச்மார்க் தான். அதேபோல் செவிலா அணிக்காக 1992-93 சீசனை மரடோனா ஆடிக்கொடுத்துள்ளார்.
அந்த நேரத்தில் கால்பந்து ரசிகர்கள் போட்டி தொடங்குவதற்கு முன்பாக மரடோனாவின் பயிற்சிகளை பார்ப்பதற்காகவே மைதானத்திற்கு முன்னதாக வருவார்களாம்.
அதைப்பற்றி செவிலா விளையாட்டு இயக்குநர் மோஞ்சி கூறுகையில், '' செவிலாவில் ஆடும்போது என ஏராளமான உதவிகளை அவர் செய்துள்ளார். ஒருநாள் நானும் அவரும் நடந்து சென்று கொண்டிருந்தோம். என் கையில் ஒரு ரோலக்ஸ் கடிகாரம் அணிந்திருந்தேன்.
ஆனால் அது போலியான ரோலக்ஸ் என்று அவரிடம் ஒத்துக்கொண்டேன். அடுத்த நாள் பயிற்சியின்போது, அவர் எனக்கு பின்னால் இருந்தார். பயிற்சி முடிந்த பின், எனக்கு ஒரு பரிசினை வழங்கி, இனி நீங்கள் எப்போதும் போலியான ரோலக்ஸை அணிய தேவையில்லை எனத் கூறினார். அந்த நிமிடத்தில் நான் நெகிழ்ந்துவிட்டேன்'' என்றார்.
இதையும் படிங்க: அதானி நிறுவனத்திற்கு எதிராக சிட்னி மைதானத்தில் களமிறங்கிய போராட்டக்காரர்கள்...!