கரோனா வைரஸ் அச்சுறுத்தலினால் கோவாவில் மட்டும் நடைபெற்றுவரும் ஐஎஸ்எல் தொடரின் ஏழாவது சீசன், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு விருந்து படைத்துவருகிறது.
அந்த வகையில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் நடப்பு சீசனில் தோல்வியைக் கண்டிராத ஏடிகே மோகன் பாகன் அணியும் - இந்த சீசனில் ஒரு வெற்றியைக்கூட பெறாத ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணியும் மோதவுள்ளனர்.
வாஸ்கோவிலுள்ள திலக் மைதான் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது.
ஏடிகே மோகன் பாகன் அணி:
ஐஎஸ்எல் தொடரில் அதிக முறை கோப்பையைக் கைப்பற்றிய அணி என்ற பெருமையைப் பெற்றுள்ள ஏடிகே அணி, நடப்பு சீசனில் கொல்கத்தாவின் பலம் வாய்ந்த உள்ளூர் அணியான மோகன் பாகனுடன் இணைந்து, தனது வெற்றிப்பாதையை தொடர்ந்து வருகிறது.
நடப்பு சீசனில் இதுவரை பங்கேற்ற மூன்று லீக் போட்டிகளிலும் வெற்றியை பெற்றுள்ள ஏடிகே மோகன் பாகன் அணி, இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று தனது வெற்றிப்பயணத்தை தொடரும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணி:
நடப்பு ஐஎஸ்எல் சீசனில் ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணி இன்னும் தனது வெற்றி கணக்கை தொடங்கவில்லை. இதுவரை மூன்று லீக் ஆட்டங்களில் விளையாடியுள்ள ஜாம்ஷெட்பூர் எஃப்சி, இரண்டு டிரா, ஒரு தோல்வியென புள்ளிப்பட்டியலில் எட்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இதனால் ஏடிகே அணியுடனான இன்றையப் போட்டியில் தங்களது முதல் வெற்றியைப் பதிவு செய்வதோடு, தொடர் வெற்றியைக் குவித்துவரும் ஏடிகே அணியின் வெற்றிப்பாதைக்கு ஜாம்ஷெட்பூர் அணி முற்றுப்புள்ளி வைக்கம் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இதனால் இன்றையப் போட்டியின் மீதான எதிர்பார்ப்பு கால்பந்து ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க:ஐஎஸ்எல்: கேரளாவை பந்தாடியது கோவா!